உள்ளூர் செய்திகள்

பரமத்தி இலங்கைத் தமிழர் மறுவாழ்வு மையத்தில், சிறுபான்மையினர் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான், வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் ஆகியோர் ஆய்வு செய்த போது எடுத்த படம்.

பரமத்தி மறுவாழ்வு மையத்தில் அமைச்சர்கள் செஞ்சி மஸ்தான், மதிவேந்தன் ஆய்வு

Published On 2023-01-01 08:36 GMT   |   Update On 2023-01-01 08:36 GMT
  • நாமக்கல் மாவட்டம் பரமத்தி இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு மையத்தில், தமிழக முதல்வர் மு. க .ஸ்டாலின் அறிவுறுத்தலின் பேரில் தமிழக சிறுபான்மையினர் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான், வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் உள்ளிட்டோர் ஆய்வு மேற்கொண்டனர்.
  • நிகழ்ச்சியில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவருக்கு ரூ.25,000 மருத்துவ உதவித்தொகை வழங்கப்பட்டது.

பரமத்தி வேலூர்:

நாமக்கல் மாவட்டம் பரமத்தி இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு மையத்தில், தமிழக முதல்வர் மு. க .ஸ்டாலின் அறிவுறுத்தலின் பேரில் தமிழக சிறுபான்மையினர் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான், வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் உள்ளிட்டோர் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது இலங்கைத் தமிழர்களுக்கு வழங்கப்படும் ரேஷன் பொருட்கள், பணக்கொடை உள்ளிட்டவை முறையாகவும் தரமாகவும் கிடைப்பதை உறுதிப்படுத்திக் கொண்டனர். முகாம் மக்களின் அடிப்படை தேவைகளான குடிநீர், சுகாதாரம், மின்சார வசதிகள் குறித்தும் கேட்டறிந்தனர். தொடர்ந்து முகாமில் உள்ள அனைத்து பகுதிகளுக்கும் ஒவ்வொரு வீடாக சென்று வீடுகளின் தற்போதைய நிலை, கட்டமைப்பு, அவர்களின் உடனடி தேவைகள் குறித்து கேட்டறிந்தனர். தொடர்ந்து பேசிய அமைச்சர் செஞ்சி மஸ்தான் தமிழக முதலமைச்சர் தமிழகத்தில் உள்ள 106 இலங்கைத் தமிழர்கள் மறுவாழ்வு மையத்தை மேம்படுத்தும் வகையில் சுமார் 316 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திட்டங்களை அறிவித்துள்ளார்.

அதனை செயல்படுத்தும் விதமாக அனைத்து இலங்கை தமிழர்கள் முகாம்களிலும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விரைவில் நகர்புற கட்டமைப்புடன் புதிய வீடுகள் கட்டித்தரபடும் என தெரிவித்தார். மேலும் பள்ளி கல்லூரிகளில் பயிலும் இலங்கைத் தமிழர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை மற்றும் மேல்நிலை வகுப்பு முடித்து கல்லூரிக்குச் செல்லும் மாணவர்களுக்கு பொறியியல் மற்றும் வேளாண் பட்டப்படிப்புகளில் சிறப்பு ஒதுக்கீடுகள் வழங்கப்பட உள்ளது. மகளிரின் முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்களை முனைப்புடன் செயல்படுத்தி வருவதாகவும் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் நாமக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் மதுரா செந்தில் அனைவரையும் வரவேற்றார். நிகழ்ச்சியில் பேரூராட்சித் தலைவர் மணி, துணைத்தலைவர் ரமேஷ் பாபு,மாவட்ட வருவாய் அலுவலர் மணிமேகலை, வட்டாட்சியர்கள் ,வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் பேரூராட்சி செயல் அலுவலர் செல்வக்குமார், பேரூராட்சி கவுன்சிலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் உள்ளிட்ட அனைத்து துறை சார்ந்த அலுவலர்களும் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவருக்கு ரூ.25,000 மருத்துவ உதவித்தொகை வழங்கப்பட்டது .

Tags:    

Similar News