உள்ளூர் செய்திகள்

சித்திரை திருவிழா: இலவச உணவின் தரம் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படும்- அமைச்சர் சுப்பிரமணியன்

Published On 2023-04-30 13:37 IST   |   Update On 2023-04-30 13:37:00 IST
  • மதுரை சித்திரை திருவிழாவில் 15 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கூடுவார்கள்.
  • தனியார் மருத்துமனைகள் மருத்துவ கழிவுகளை முறையாக அப்புறப்படுத்த வேண்டும். இல்லையென்றால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

மதுரை:

சென்னையில் இருந்து இன்று விமானம் மூலம் மதுரை வந்த சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது:-

மதுரை சித்திரை திருவிழாவில் 15 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கூடுவார்கள். இதனை கருத்தில் கொண்டு தொற்றுநோய் பாதிப்பு வராத வண்ணம் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. திருவிழாவை முன்னிட்டு மதுரையில் குடிநீர் சுகாதாரமாக வழங்க ஆய்வுக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் நகரில் கொசுத்தொல்லை இல்லாத வண்ணம் மாநகராட்சி மூலம் அனைத்து பகுதிகளிலும் கொசு மருந்து அடிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. திருவிழாவின்போது இலவசமாக பக்தர்களுக்கு வழங்கப்படும் உணவு பொருட்கள், நீர்-மோர் உள்ளிட்ட குளிர்பானங்கள் தரம் குறித்து ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளது. அன்னதானங்களை சுகாதாரத்துறை அனுமதி பெற்று தான் வழங்கவேண்டும்.

இவர்கள் உணவு மற்றும் குளிர்பானங்களில் செயற்கை நிறமிகள் பயன்படுத்தப்பட்டுள்ளதா? என ஆய்வு செய்து தரமற்ற உணவுகளை விநியோகம் செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுப்பார்கள். கடந்த ஆண்டு 20 மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டிருந்தது. இந்த ஆண்டு 56 இடங்களில் முகாம்கள் அமைக்கப்படும்.

தனியார் மருத்துமனைகள் மருத்துவ கழிவுகளை முறையாக அப்புறப்படுத்த வேண்டும். இல்லையென்றால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News