உள்ளூர் செய்திகள்

பூ மார்க்கெட் சாலையை சீரமைக்ககோரி மனு கொடுத்த வியாபாரிகள்.

நெல்லை சந்திப்பு பூ மார்க்கெட் சாலையை சீரமைக்க வேண்டும்-மேயரிடம், வியாபாரிகள் மனு

Published On 2022-06-28 09:21 GMT   |   Update On 2022-06-28 09:21 GMT
  • நெல்லை சந்திப்பு பூ மார்க்கெட்டுக்கு வியாபாரத்திற்காக தினமும் ஏராளமான வியாபாரிகள் பல்வேறு வாகனங்களில் வந்து செல்கின்றனர்.
  • குலவணிகர்புரம், குறிச்சி உள்ளிட்ட பகுதியில் சில மாதங்களாக குடிநீர் கலங்கலான முறையில் வருகிறது.

நெல்லை:

நெல்லை மாநகராட்சி அலுவலகத்தில் இன்று வாராந்திர பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது.

கூட்டத்தில் மேயர் சரவணன், துணை மேயர் கே.ஆர்.ராஜூ, மாநகராட்சி கமிஷனர் சிவகிருஷ்ணமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டு பொதுமக்களிடம் மனுக்களை பெற்றனர்.

நெல்லை மாவட்ட மொத்த பூ கமிஷன் வியாபாரிகள் சங்க பொருளாளர் வெங்கடகிருஷ்ணன், தி.மு.க. வர்த்தக அணி துணை அமைப்பாளர் எல்.ஐ.சி. பேச்சிமுத்து தலைமையில் வியாபாரிகள் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-

நெல்லை சந்திப்பு பகுதியில் உள்ள பூ மார்க்கெட் நெல்லையில் பிரதான பூ மார்க்கெட் ஆகும். இங்கு வியாபாரத்திற்காக தினமும் ஏராளமான வியாபாரிகள் பல்வேறு வாகனங்களில் வந்து செல்கின்றனர்.

இதனால் எப்போதும் பொதுமக்கள் கூட்டத்தால் பரபரப்பாக காணப்படும். முகூர்த்த நாட்களில் அதிகளவில் பொதுமக்கள் திரள்வார்கள்.

ஆனால் சந்திப்பில் இருந்து பூ மார்க்கெட் செல்லும் சாலை மிகவும் மோசமான நிலையில் பழுதடைந்து காணப்படுகிறது. எனவே உடனடியாக அந்தச் சாலையை சீரமைக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

31-வது வார்டு அ.தி.மு.க. கவுன்சிலர் அமுதா சுந்தர் கலங்கலான தண்ணீரை பாட்டிலில் கொண்டு வந்து கொடுத்த மனுவில், 31-வது வார்டுக்குட்பட்ட குலவணிகர்புரம், குறிச்சி உள்ளிட்ட பகுதியில் சில மாதங்களாக குடிநீர் கலங்கலான முறையில் வருகிறது.

இது தொடர்பாக இப்பகுதியினர் 3 மாதமாக அதிகாரிகளிடம் புகார் தெரிவித்து வருகின்றனர். ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.

இதனால் 10-க்கும் மேற்பட்டவர்களுக்கு மஞ்சள் காமாலை பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. எனவே உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது.

மனுவை பெற்று கொண்ட மேயர் சரவணன், இன்றுகாலை முதல் குடிநீர் குழாய்கள் பதிக்கப்பட்ட இடங்கள் தோண்டப்பட்டு பணிகள் நடந்து வருகிறது. விரைவில் சுத்தமான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

பிறப்பு சான்றிதழ்

டவுன் பகுதியை சேர்ந்த சமூகஆர்வலர்கள் கொடுத்த மனுவில், பிறப்பு-இறப்பு பதிவுக்காக மாநகராட்சி அலுவலகத்தில் பதிவு செய்வதில் காலதாமதம் ஏற்பட்டு வருகிறது.

இது தொடர்பான மனுக்களை கொடுப்பதற்காக மாநகராட்சி வளாகத்தில் ஒரு பெட்டி வைக்கப்பட்டு உள்ளது. அதில் மனுக்களை போட்டு செல்வதால் எங்களுக்கு ஒப்புகை சீட்டுகள் வழங்கப்படுவதில்லை.

சான்றிதழ் கிடைக்காதபட்சத்தில் அது தொடர்பாக விளக்கம் கேட்க ஒப்புகை சீட்டுகள் வழங்கப்பட வேண்டும். மேலும் குறித்த காலத்தில் பிறப்பு-இறப்பு பதிவுகள் பதிவுசெய்ய வேண்டும் என கூறப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News