உள்ளூர் செய்திகள்

மருத்துவ மாணவரை கடத்தி ரூ.2 லட்சம் பணம்-நகைகள் பறிப்பு: 3 பேர் கைது

Published On 2023-06-15 10:18 GMT   |   Update On 2023-06-15 10:18 GMT
  • வினோத்துக்கு, அதே பகுதியை சேர்ந்த போதை பொருள் பயன்படுத்தும் நபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
  • பயந்துபோன வினோத்தின் தந்தை வங்கி மூலமாக ரூ.1.90 லட்சம் அனுப்பி வைத்து உள்ளார்.

சென்னை:

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையை சேர்ந்தவர் வினோத் வனாஸ்வர். இவர் பிலிப்பைன்ஸ் நாட்டில் டாக்டருக்கு படித்தார். அங்கு படிப்பை முடித்து விட்டு தமிழகத்துக்கு திரும்பிய வினோத் பழைய பல்லாவரத்தில் தங்கியுள்ளார். தற்போது மருத்துவ தேர்வுக்கான படிப்பை அவர் மேற்கொண்டு வருகிறார்.

வினோத்துக்கு, அதே பகுதியை சேர்ந்த போதை பொருள் பயன்படுத்தும் நபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனை பயன்படுத்தி வினோத்துக்கு ஏற்கனவே அறிமுகமான சங்கர் என்பவர் போதை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் போல நடித்து கடத்த திட்டமிட்டார். இதன்படி சங்கரும் அவரது நண்பர்கள் 3 பேரும் சேர்ந்து வினோத்தை டீ குடிக்க அழைத்துள்ளனர்.

அப்போது திடீரென 2 பேர் சேர்ந்து வினோத்தை காரில் தூக்கி போட்டு கடத்திச் சென்றனர். அவர்கள் நாங்கள் போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் என்று கூறி ஏமாற்றியுள்ளனர்.

மருத்துவ மாணவனான வினோத்தின் தந்தைக்கு போன் செய்து உங்கள் மகனை கைது செய்துள்ளோம். சிறைக்கு அனுப்பாமல் இருக்க வேண்டும் என்றால் ரூ.8 லட்சம் பணம் வேண்டும் என்று கேட்டு மிரட்டியுள்ளனர்.

இதனால் பயந்துபோன வினோத்தின் தந்தை வங்கி மூலமாக ரூ.1.90 லட்சம் அனுப்பி வைத்து உள்ளார். இந்த பணத்தை பறித்துக் கொண்ட 2 பேரும் 5 பவுன் செயின் மற்றும் ஒரு பவுன் மோதிரம் ஆகியவற்றையும் பறித்துக்கொண்டு மாணவர் வினோத்தை காரில் இறக்கி விட்டு தப்பினார்கள்.

இதுபற்றிய புகாரின் பேரில் பல்லாவரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர் மருத்துவ மாணவரை கடத்திய வழக்கில் சங்கர் மற்றும் காரில் கடத்திய சிவா, பாஸ்கர் ஆகிய மூவரையும் கைது செய்தனர்.

கைதான 3 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கில் கொட்டிவாக்கத்தை சேர்ந்த ஸ்ரீதத் என்பவரை போலீசார் தேடி வருகிறார்கள்.

Tags:    

Similar News