உள்ளூர் செய்திகள்

மருத்துவ படிப்புக்கான முதல்கட்ட கலந்தாய்வு நிறைவு: 14 ஆயிரம் பேர் விருப்ப இடங்களை தேர்வு செய்தனர்

Published On 2022-10-28 02:29 GMT   |   Update On 2022-10-28 02:29 GMT
  • ஒதுக்கீட்டு ஆணை பெற்ற மாணவர்கள் அவர்களுக்கான கல்லூரிகளில் சேரலாம்.
  • நவம்பர் 7-ந்தேதி 2-ம் கட்ட கலந்தாய்வு ஆன்லைனில் தொடங்கும்.

சென்னை :

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். போன்ற மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான கலந்தாய்வு தொடங்கி நடைபெற்று வருகின்றன. இதில் சிறப்பு பிரிவு மற்றும் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டுக்கான கலந்தாய்வு நேரடி முறையில் நடத்தி முடிக்கப்பட்டது.

அதனைத்தொடர்ந்து பொதுப்பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு கடந்த 19-ந்தேதி முதல் 25-ந்தேதி வரை ஆன்லைன் வாயிலாக நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது. இடையில் தீபாவளி பண்டிகை வந்ததால், வங்கி செயல்பாடுகளுக்கு அவகாசம் கேட்டு தேர்வர்கள் கோரிக்கை விடுத்து இருந்தனர். அதை ஏற்று நேற்று வரை மருத்துவ படிப்புக்கான பொது பிரிவு கலந்தாய்வில் மாணவ-மாணவிகள் விருப்ப இடங்களை தேர்வு செய்வதற்கு அவகாசம் வழங்கப்பட்டது.

அதன்படி, 14 ஆயிரத்து 21 மாணவ-மாணவிகள் இந்த பொதுப்பிரிவு ஆன்லைன் கலந்தாய்வில், விருப்ப இடங்களை தேர்வு செய்திருக்கின்றனர். தரவரிசை பட்டியல் மற்றும் விருப்ப இடங்களை தேர்வு செய்ததன் அடிப்படையில் இடங்கள் ஒதுக்கப்பட்டு, இறுதி முடிவை நாளை மறுதினம் (ஞாயிற்றுக்கிழமை) மருத்துவ மாணவர் சேர்க்கை குழு ஆன்லைனில் வெளியிட இருக்கிறது. அதில் ஒதுக்கீட்டு ஆணை பெற்ற மாணவர்கள் அவர்களுக்கான கல்லூரிகளில் சேரலாம். இடங்கள் கிடைக்காத மாணவர்கள், அடுத்த மாதம் (நவம்பர்) 7-ந்தேதி ஆன்லைனில் தொடங்கும் 2-ம் கட்ட கலந்தாய்வில் பங்கு பெறலாம் என மருத்துவ மாணவர் சேர்க்கை குழு தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News