உள்ளூர் செய்திகள்

திருக்கார்த்திகை திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான கார்த்திகை தேரோட்டம் இன்று நடந்தது. இதில் திரளானோர் வடம்பிடித்து தேரை இழுத்தனர். 

திருப்பரங்குன்றம் முருகன் கோவில் கார்த்திகை தேரோட்டம்

Published On 2022-12-06 09:23 GMT   |   Update On 2022-12-06 09:23 GMT
  • திருப்பரங்குன்றம் முருகன் கோவில் கார்த்திகை தேரோட்டம் நடந்தது.
  • நவம்பர் 28-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.



தேரில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய முருகப்பெருமான்-தெய்வானை.

 திருப்பரங்குன்றம்

முருகப்பெருமானின் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோவிலில் கார்த்திகை மாதம் தோறும் கார்த்திகை தீபத் திருவிழா 10 நாட்கள் நடைபெறும். இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த நவம்பர் 28-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

விழாவினை முன்னிட்டு சுப்பிரமணிய சுவாமி-தெய்வானையுடன் தினமும் காலையில் தங்க சப்பரத்திலும், மாலை யில் தங்கமயில் , தங்க குதிரை , வெள்ளி பூதம், வெள்ளி ஆட்டுக்கிடா உள்ளிட்ட வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று பட்டாபிஷேகம் நடைபெற்றது. இதில் சுப்பிரமணியசாமிக்கு நவரத்தினங்கள் பதித்த செங்கோல், சேவல் கொடி சாற்றி பட்டாபிஷேகம் நடந்தது.

விழாவின் சிகர நிகழ்ச்சியான கார்த்திகை தேரோட்டம் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா காரணமாக கட்டுப்பாடு களுடன் நடந்தது. கொரோனா பரவல் தடை நீக்கப்பட்ட பின் இன்று நடந்த கார்த்திகை தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

காலை 11.30 மணியளவில் முருகப்பெருமான்-தெய்வானை சிறப்பு அலங்காரத்தில் தேரில் எழுந்த ருளினர். அதனைத்தொடர்ந்து தேரோட்டம் நடைபெற்றது. அரோகரா கோஷம் எழுப்ப பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

திருக்கார்த்திகையை முன்னிட்டு திருப்ப ரங்குன்றம், மதுரை திருமங்கலம், கள்ளிக்குடி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் விருதுநகர், சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக திருப்பரங்குன்றத்துக்கு வந்த வண்ணம் இருந்தனர்.

கார்த்திகை தீபத்திரு நாளான இன்று மாலை 6 மணி அளவில் கோவிலில் பாலதீபம் ஏற்றப்பட்டு அதன் பின் மலை மேல் மகா தீபம் ஏற்றப்படுகிறது. இதற்காக திருவண்ணாமலை பகுதியில் இருந்து வல்லுனர் குழுவினர் திருப்பரங்குன்றம் வந்து தீபம் ஏற்றுவதற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

சரியாக மாலை 6 மணிக்கு மலை மேல் மகாதீபம் ஏற்றப்படுகிறது. இதனை காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருப்பரங்குன்றம் கோவிலில் குவிந்தனர். மகாதீபம் ஏற்றப்பட்ட பின் வீடுகளில் தீபம் ஏற்றப்படும்.

தொடர்ந்து இரவு 8 மணிக்கு 16 கால் மண்டபம் பகுதியில் சொக்கப்பனை கொளுத்தப்படும். இரவு சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் தங்கமயில் வாகனத்தில் எழுந்தருளி திருவீதி உலா வருகிறார். விழாவின் நிறைவு நாள் நிகழ்ச்சியாக நாளை (7-ந் தேதி) தீர்த்த உற்சவம் நடைபெறுகிறது.

கார்த்திகை திருவிழாவை யொட்டி மலை மற்றும் ரத வீதிகளில் நூற்றுக்க ணக்கான போலீசார் பாது காப்பு பணியில் ஈடுபட்டு ள்ளனர்.


Tags:    

Similar News