உள்ளூர் செய்திகள்

பொய்கைகரைப்பட்டியில் இன்று தெப்ப உற்சவம் நடந்தது.

அன்னப்பறவை வாகனத்தில் எழுந்தருளிய கள்ளழகர்

Published On 2023-03-07 08:50 GMT   |   Update On 2023-03-07 08:50 GMT
  • அழகர்கோவிலில் மாசி திருவிழா நடந்தது.
  • பொய்கைகரைப்பட்டி தெப்பக்குளத்தில் அன்னப்பறவை வாகனத்தில் கள்ளழகர் எழுந்தருளினார்.

அலங்காநல்லூர்

தமிழகத்தின் தென் திருப்பதி என்று அழைக்கப்ப டுவதும், 108 வைணவ தலங்களில் ஒன்றானதுமான மதுரையை அடுத்த அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவில் ஆகும்.

இந்த கோவிலில் நடை பெறும் திருவிழாக்களில் மாசி மாதம் நடைபெறும் தெப்ப உற்சவம் முக்கியமானது. இந்த விழா நேற்று மாலை கஜேந்திர மோட்சத்துடன் தொடங்கியது. கருட வாகனத்தில் கள்ளழகர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

திருவிழாவின் முக்கிய நிகழ்வான தெப்ப உற்சவம் இன்று காலை நடந்தது. ஸ்ரீ தேவி, பூமிதேவி சமேத கள்ளழகர் என்ற சுந்தராஜ பெருமாள் எழுந்தருளி மேளதாளம் முழங்க தீவட்டி பரிவாரங்களுடன் தெப்பத்திற்கு புறப்பட்டார்.

மண்டூக தீர்த்தம் என்ற பொய்கைகரைப்பட்டி புஸ்கரணிக்கு வழி நெடுகிலும் நின்று சேவை சாதித்தார். பொய்கைக்கரைப்பட்டி தெப்பத்தில் காலை 10.50 மணிக்கு தெப்பத்தின் கிழக்கு புறமுள்ள மண்டபத்தில் எழுந்தருளினார். அன்னப்பறவை வாகனத்தில் தெப்பத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

கோவிந்தா... கோவிந்தா... என கோஷமிட பக்தி பரவசத்துடன் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். பகல் முழுவதும் தெப்பத்தில் இருக்கும் கள்ளழகர் இன்று மாலை பூஜை முடித்து மீண்டும் தெப்பத்தில் எழுந்தருளுவார். தெப்ப உற்சவத்தை காண சுற்று வட்டாரத்தில் இருந்தும், வெளி மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்திருந்து வழிபாடு செய்தனர்.

இன்று இரவு சுவாமி வந்த வழியாக சென்று கள்ளழகர் கோவிலுக்கு இருப்பிடம் சேருகிறார்.

Tags:    

Similar News