உள்ளூர் செய்திகள்

உரிய கல்வி தகுதி, அனுபவம் இருந்தும் பதவி உயர்வு இல்லாமல் பரிதவிக்கும் தெருவிளக்கு ஊழியர்கள்

Published On 2023-10-31 05:05 GMT   |   Update On 2023-10-31 05:05 GMT
  • உரிய கல்வி தகுதி, அனுபவம் இருந்தும் 35 ஆண்டுகளாக பதவி உயர்வு இல்லாமல் நகராட்சி தெருவிளக்கு ஊழியர்கள் பரிதவிக்கின்றனர்.
  • முதல்-அமைச்சர் நடவடிக்கை எடுக்க ஊழியர்கள் வலியுறுத்துகின்றனர்.

மதுரை

தமிழ்நாட்டில் உள்ள நகராட்சி தெரு விளக்குகளை கடந்த 1989ம் ஆண்டு வரை மின்வாரியம் மூலம் பராமரிப்பு செய்து வந்தது. மின்வாரியத்தில் பணி சுமை அதிகமாக இருப்பதால் நகராட்சி பகுதிகளில் உள்ள அதிக அளவு தெருவிளக்குகள் பராமரிப்பு இல்லாமல் இருள் சூழ்ந்த நிலை இருந்து வந்தது.

இதனால் நகராட்சி மக்கள் பிரதிநிதிகள் அப்போதைய முதல்வர் கருணாநிதியிடம் நகராட்சியே தெருவிளக்குகளை பராமரிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர் அதன் அடிப்படையில் நகராட்சி ஊழியர்களை நியமித்து தெருவிளக்குகளை பராமரிக்க வேண்டும் என முன்னாள் முதல்வர் கருணாநிதி சட்டமன்றத்தில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்றி அதன் அடிப்படையில் நகராட்சிகளில் தெருவிளக்கு பராமரிப்பு செய்ய ஊழியர்கள் நியமித்துக் கொள்ள அனுமதி வழங்கினார்.

நகராட்சிகளில் 10-ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் 2 வருட தொழிற்கல்வி பெற்றவர்களை மின்கம்பியாளர்களாகவும். 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களை மின்கம்பி உதவியாளர்களாகவும் நகராட்சி நிர்வாக இயக்குனர் உத்தரவுப்படி தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நகராட்சிகளிலும் வேலைவாய்ப்புதுறை மூலம் பணி நியமனம் செய்யப் பட்டனர். ஆனால் பணி விதிகள் ஏதும் உருவாக்கப்படவில்லை. பின்பு நகராட்சி தெருவிளக்கு பராமரிப்பு பணி ஊழியர்கள் பணி விதிகள் மற்றும்பதவி உயர்வு வழங்க பல்வேறு கட்டபோராட்டங்கள் அரசு ஊழியர் சங்கத்துடள் இணைந்து நடத்தினர்.

அதன் விளைவாக கடந்த 2008-ம் ஆண்டு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்குதுறை அரசு ஆணை 113-ல் மின்கம்பியாளர்க ளுக்கு மின்பணியாளர் நிலை மின்கம்பியாளர்களாக வும் 1-ம், மின்கம்பி உதவியாளர்களுக்கு பயிற்சி அளித்து உத்தரவிடப்பட்டது. இந்த விவகாரத்தில் குறிப்பிட்ட பிரச்சினையில் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு தடை ஆணை வழங்கப்பட்டு, பின்னர் நீக்கப்பட்டது.

அதன்பிறகும் மின்கம்பியாளர்களுக்கும், மின் பணியாளர் நிலை 2ல் உள்ளவர்களுக்கும் முறை முன்னுரிமை பட்டியல் வெளியிட்டும் பதவி உயர்வு வழங்கவில்லை. இந்நிலையில் சமீபத்தில் வெளியிடப்பட்ட அரசு ஆணை 10ல் மின்கம்பி யாளர் பணியிடம் இல்லாமல் செய்து விட்டனர்.

தற்போது மின்பணியாளர் நிலை 2ல் உள்ளவர்களுக்கு மட்டும் முன்னுரிமை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதனால் மின்கம்பி யாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். 1989-ம் ஆண்டு பணியில் சேர்ந்த 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற இளநிலை உதவியாளர்கள் இன்று ஆணையாளர் வரை பதவி உயர்வு பெற்றுள்ளனர். ஆனால் 1989-ம் ஆண்டு பணியில் சேர்ந்த மின்கம்பியாளர்கள் 10-ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் 2 வருட தொழில் பயிற்சி முடித்தும் இதுவரை பதவி வழங்கப்படவில்லை.

இதனால் நகராட்சி தெரு விளக்கு பராமரிப்பு ஊழியர்களுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தி விட்டது. எனவே தமிழக முதல்வர் நகராட்சி தெரு விளக்கு பராமரிப்பு ஊழியர்கள் மீது கருணை கொண்டும் 35வருட பணியை கருத்தில் கொண்டும் விரைவில் ஒய்வு பெறும் நாட்களை நெருங்கி விட்ட ஊழியர்களுக்கு தற்போது நகராட்சியில் அதிக எண்ணிக்கையில் காலியாக உள்ள பணி மேற்பார்வையாளர்களாக பதவி உயர்வு வழங்க வேண்டும் என நகராட்சி மாநகராட்சி பொறியியல் பிரிவு ஊழியர்கள் சங்க தலைவர் ஐவன் மற்றும் பொதுச் செயலாளர் திருமூர்த்தி ஆகியோர் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags:    

Similar News