வீடுகள் முன்பு தேங்கி நிற்கும் கழிவு நீர்.
கழிவு நீரை அகற்ற கோரி பொதுமக்கள் மறியல்
- மதுரையில் கழிவு நீரை அகற்ற கோரி பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர்.
- மாநகராட்சி அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து, பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.
மதுரை
மதுரை மாவட்டத்தில் கடந்த வாரம் கனமழை பெய்தது. பெரிய கண்மாய்கள் நிரம்பி, மறுகால் பாய்ந்தன.
கூடல் புதூர் ஆபீசர்ஸ் டவுன், குலமங்கலம் மெயின் ரோடு மற்றும் மீனாம்பாள்புரம் உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. அவை வெளியேறி செல்வதற்கான கால்வாய்களில் அடைப்பு ஏற்பட்டது. அதனை மாநகராட்சி நிர்வாகம் சரி செய்யவில்லை. அங்கு தண்ணீர் தொடர்ந்து தேங்கி நிற்கிறது.
இதன் காரணமாக அங்கு வசிக்கும் பொது மக்கள் கொசு தொல்லை உள்பட பல்வேறு பிரச்சினைகளால் அவதிப்படுகின்றனர்.
இதை கண்டித்து 4-வது வார்டு, கனகவேல் நகர் பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் இன்று காலை குலமங்கலம் மெயின் மெயின் ரோட்டில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
குடியிருப்பு பகுதியில் தேங்கி நிற்கும் கழிவு நீரை அகற்ற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்கள் கோஷம் எழுப்பினர்.
மாநகராட்சி அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து, பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். பின்னர் சாலை மறியல் கைவிடப்பட்டது.