உள்ளூர் செய்திகள்

தனியார் நிதி நிறுவனத்தில் பணம் செலுத்தி ஏமாந்தவர்கள் புகார் செய்யலாம்

Published On 2023-02-21 09:55 GMT   |   Update On 2023-02-21 09:55 GMT
  • தனியார் நிதி நிறுவனத்தில் பணம் செலுத்தி ஏமாந்தவர்கள் புகார் செய்யலாம்.
  • மதுரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் அறிவித்துள்ளனர்.

மதுரை

மதுரை பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் துணை கண்காணிப்பாளர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

மதுரை பி.பி.குளம் பகுதியில் பி.டி.ராஜன் ரோடு, ஏ.வி.ஆர். காம்பிளக்சில் இயங்கி வந்த பாரமவுண்ட் மார்க்கெட்டிங் கார்ப்பரேஷன் பிரைவேட் லிமிடெட் (பி.எம்.சி.) என்ற நிதிநிறுவனத்தை சேக் முகைதீன் என்பவர் நிர்வாக இயக்குநராக இருந்து கொண்டு நடத்தினார். அவர் பொதுமக்களிடம் திருக்குறள் புத்தகங்கள் விற்பனை செய்து அதில் கிடைக்கும் லாபத்தை முதலீட்டாளர்களுக்கு திரும்ப செலுத்துவதாக உறுதி அளித்தார். உறுதி மொழியில் கூறியது போல் லாபத்தை திரும்ப செலுத்தாததால் பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள் மதுரை பொருளாதார குற்றப்பிரிவில் புகார் அளித்தனர். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு மதுரை டான்பிட் சிறப்பு கோர்ட்டில் எதிரிகள் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு விசாரணையில் இருந்து வருகிறது. அதன் பின்பு மேற்கண்ட நிதி நிறுவனத்தின் மீது பணம் மோசடி செய்ததாக இதுவரை பல புகார் மனுக்கள் பெறப்பட்டு சாட்சிகள் விசாரிக்கப்பட்டுள்ளது.

எனவே இந்த நிதிநிறுவனத்தில் முதலீடு செய்து ஏமாற்றப்பட்ட முதலீட்டாளர்கள் யாரேனும் இதுவரை புகார் அளிக்காமல் இருந்தால் ஏப்ரல் மாத இறுதிக்குள் எமது அலுவலகத்தில் சம்பந்தப்பட்ட ஆவணங்களுடன் நேரில் புகார் கொடுக்குமாறு முதலீட்டாளர்களை கேட்டுக் கொள்கிறோம். மேலும் ஏற்கனவே புகார் கொடுத்திருந்தாலும் தாங்கள் பெயரும் சாட்சிகளாக சேர்க்கப்பட்டுள்ளதா? என்பதை அறிய அலுவலக தொலைபேசி எண் மூலம் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News