உள்ளூர் செய்திகள்

ஷேர் ஆட்டோக்களின் விதிமீறல்களால் உயிருக்கு உத்தரவாதம் இல்லாத மதுரை நகர சாலைகள்

Published On 2023-11-05 08:39 GMT   |   Update On 2023-11-05 08:39 GMT
  • ஷேர் ஆட்டோக்களின் விதிமீறல்களால் உயிருக்கு ஆபத்து ஏற்படும் வகையில் மதுரை நகர சாலைகள் உள்ளன.
  • குறைந்தது 8 பயணிகள் வரை ஏற்றிச் செல்கின்றனர்.

மதுரை

தமிழகத்தில் பெருகி வரும் மக்கள் தொகைக்கேற்ப வாகன பயன்பாடும் அதிகரித்துள்ளது. குறிப்பாக பொது போக்குவரத்தான அரசு பஸ்களை அதிக அளவில் மக்கள் நம்பியுள்ளனர். அரசு பஸ்கள் செல்லாத வழித்தடங்களில் மினி பஸ்கள், ஷேர் ஆட்டோக்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள் ஓர் இடத்தில் இருந்து வேறு ஒரு இடத்திற்கு செல்ல பயணங்கள் எளிதாகின்றன.

ஆனால் மதுரை நகரில் ஷேர் ஆட்டோக் களால் நன்மைகளை விட சிரமங்களையே பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அதிகமாக சந்திக்க வேண்டிய நிலை உள்ளது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு மதுரை நகரில் குறைந்த அளவு ஷேர் ஆட்டோக்கள் இயக்கப்பட்டது. ஆனால் தற்போது புற்றீசல்கள் போல் ஷேர் ஆட்டோக்கள் அதிகரித்து வருகின்றன.

நினைத்த இடத்தில் ஷேர் ஆட்டோக்களை நிறுத்தி ஆட்களை ஏற்றுவதும் இறக்குவதும், பஸ் நிறுத்தங்களில் மணிக்கணக்கில் நின்று பயணிகளை ஏற்றி செல்வது, சாலையில் அதிவேகமாக ஓட்டி செல்வது உள்ளிட்ட பல்வேறு விதிகளை ஷேர் ஆட்டோக்கள் ஓட்டுனர்கள் மீறி வருவது தொடர்கதையாக நடந்து வருகிறது. ஏற்கனவே மதுரை நகர சாலைகள் குண்டும் குழியுமாக உள்ள நிலையில் ஷேர் ஆட்டோக்களின் விதிமீறல்களால் வாகன ஓட்டிகளின் உயிருக்கு உத்தரவாதம் இல்லாத நிலை உள்ளது.

தெற்கு வாசல், கோரிப்பாளையம், மாட்டுத்தாவணி, பெரியார் பஸ் நிலையம், அவனியாபுரம், காளவாசல், திருப்பரங்குன்றம், கீழவாசல், காமராஜர் சாலை, உள்ளிட்ட பல பகுதிகளில் போக்குவரத்து பாதிப்புக்கும் நெரிசலுக்கும் முக்கிய காரணமாக இருப்பது ஷேர் ஆட்டோக்கள் என்பது நிதர்சனமான உண்மை. ஷேர் ஆட்டோக்கள் ரோட்டில் நிறுத்தி பயணிகளை ஏற்றி செல்வதால் அடிக்கடி போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது.

மேலும் பயணிகளை ஏற்றுவதில் ஷேர் ஆட்டோ ஓட்டுநர்களிடையே நடுரோட்டிலேயே கடும் வாக்குவாதம் ஏற்படுகிறது. சில நேரங்களில் அடிதடிகளில் முடிகிறது.

பண்டிகை நேரத்தில் ஆட்களை ஏற்றி செல்வதில் அருகருகே ஆட்ேடாக்களை நிறுத்தி வைத்து கொண்டு வாக்கு வாதத்தில் ஈடுபடு கின்றனர்.

மோட்டார் வாகன சட்டத்தின் படி 18 வயது நிரம்பியவர்கள் மற்றும் லைசன்ஸ் பெற்றவர்கள் மட்டுமே மோட்டார் சைக்கிள், ஆட்டோ, கார் உள்ளிட்ட வாக னங்களை இயக்க வேண்டும் என்ற விதி உள்ளது. ஆனால் மதுரையில் ஓட்டும் சில ஷேர் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு மேற்கண்ட ஆவணங்கள் முறையாக உள்ளதா? என தெரியவில்லை. போக்குவரத்து விதிகள் குறித்தும் போதிய விழிப்புணர்வும் இல்லை. 18 வயதுக்கு குறைந்த சிறுவர்கள் ஷேர் ஆட்டோக்களை இயக்குவதை காண முடிகிறது. மதுரையில் இயக்கப்படும் ஒரு ஷேர் ஆட்டோவில் குறைந்தது 8 பயணிகள் வரை ஏற்றிச் செல்கின்றனர். இதனால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது.

ஷேர் ஆட்டோக்கள் விதிமீறல்களுக்கு தொடர்ச்சியாக அபராதங்கள் விதிக்கப்படு கிறது. ஆனால் அபராதம் கட்டிவிட்டு மீண்டும் ஷேர் ஆட்டோ ஓட்டுநர்கள் மனம் போன போக்கில் செயல்படுகின்றனர். பல்வேறு பகுதிகளிலும் போக்குவரத்து நெரிசலுக்கு முக்கிய காரணமாக ஷேர் ஆட்டோக்கள் உள்ளன.

கடந்த காலங்களில் 3 மாதத்திற்கு ஒருமுறை நகர் முழுவதும் ஷேர் ஆட்டோக்களை போலீசார் தணிக்கை செய்து வந்தனர். ஆனால் தற்போது இந்த நடைமுறையை காண முடியவில்லை. இது ஷேர் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு சாதகமாக அமைந்து விட்டது.

இந்த நிலையில் மதுரை நகர போலீஸ் கமிஷனர் லோகநாதன் ஷேர் ஆட்டோக்கள் விதிமீறல் தொடர்பாக கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது .

Tags:    

Similar News