உள்ளூர் செய்திகள்

விவசாயிகள் மீது தி.மு.க. அரசு பொருளாதார தாக்குதல்

Published On 2022-12-28 07:54 GMT   |   Update On 2022-12-28 07:54 GMT
  • விவசாயிகள் மீது தி.மு.க. அரசு பொருளாதார தாக்குதல் நடத்துவதாக ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டி உள்ளார்.
  • ஏழை, எளிய மக்களுக்கு பொங்கல் பரிசு தொகையுடன், கரும்பை இணைக்க வேண்டும்.

மதுரை

முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:-

தமிழகத்தில் 43 ஆயிரம் ஏக்கருக்கு மேல் விவசாயிகள் செங்கரும்பு நடவு செய்துள்ளனர். இதை நம்பி ஏக்கருக்கு ரூ.45 ஆயிரம் முதல் ரூ.60 ஆயிரம் வரை செலவு செய்த விவசாயிகள் இதை அரசு கொள்முதல் செய்து பொங்கல் பரிசு தொகுப்போடு மக்களுக்கு வழங்கும் என்ற நம்பிக்கையோடு அவர்கள் கரும்பை விதைத்து வளர்த்து வைத்திருக்கிறார்கள்.

கடந்த அ.தி.மு.க. ஆட்சி காலங்களில் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பரிசுடன் கரும்பு வழங்கப்பட்டது. வருகிற பொங்கலுக்கு அரசு வழங்கும் பொங்கல் தொகுப்பில் கரும்பு இடம் பெறவில்லை. இதனால் கரும்பு விவசாயிகள் போராடி வருகிறார்கள்.

மிகப்பெரிய பொரு ளாதார பாதிப்பில் கரும்பு விவசாயிகள் வஞ்சிக்கப்பட்டு இருக்கி றார்கள். பொருளாதார தாக்குதல் அவர்கள் மீது தொடுக்கப்பட்டு இருக்கிறது. இதனால் அவர்கள் கண்ணீரும் கம்பலையுமாக இருக்கிறார்கள்.

கரும்பு ஏன் வழங்கவில்லை என்று சொன்னால் அதற்கா கத்தானே பணம் தருகிறோம். வாங்கிக் கொள்ளுங்கள் என்று தி.மு.க. அமைச்சர்கள் விளக்கம் தருகிறார்கள்.

முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆட்சியில், பொங்கல் தொகுப்பில் ரூ.2,500 ரொக்கம், அரிசி, சர்க்கரை, ஏலக்காய், முந்திரி, ஒரு கரும்பு 2 கோடியே 10 லட்சம் குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது.

கடந்த பொங்கலுக்கு தி.மு.க. ஆட்சியில் 21 வகை பொருட்கள் வழங்கப்பட்டதாக சொல்லி அதில் எத்தனை புகார்களை இந்த அரசு சந்தித்தது என்பது நமக்கு நினைவில் இருக்கிறது.

இந்த பொங்கலில் மக்கள் மகிழ்ச்சியோடு இருக்க வேண்டாமா? இந்த அரசின் மீது நம்பிக்கை வைத்து வாக்களித்த மக்கள் வேதனையில் இருக்கிறார்களே? கரும்பு கொடுப்பதனால் உங்களுடைய பட்ஜெட்டில் என்ன துண்டு விழுவா போகிறது? துண்டு கரும்பு கொடுப்பதால் பட்ஜெட்டில் துண்டு விழுவதாக தெரியவில்லை.

இந்த கரும்பை கொள்முதல் செய்தாலே விவசாயியின் கண்ணீரைத் துடைக்கும் நல்ல காரியம் அல்லவா நடைபெறும்? அதில் உங்களுக்கு என்ன வருத்தம் என்று தெரியவில்லை.

இந்த அரசை நம்பி விதைத்திருக்கிற கரும்பை கொள்முதல் செய்வதற்கு தி.மு.க. அரசு முன் வரவேண்டும். ஏழை, எளிய மக்களுக்கு பொங்கல் பரிசு தொகையுடன், கரும்பை இணைக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News