உள்ளூர் செய்திகள்

தல்லாகுளம் திருமுக்குளம் வடக்கு தெரு சாலை குண்டும் குழியுமாக உள்ளது.

சேதமடைந்த சாலைகளில் வாகன ஓட்டிகள் கடும் அவதி

Published On 2022-08-06 15:22 IST   |   Update On 2022-08-06 15:22:00 IST
  • சேதமடைந்த சாலைகளில் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.
  • மாவட்ட நிர்வாகமும் மாநகராட்சியும் இணைந்து முக்கிய சாலைகளை உடனடியாக சரி செய்ய பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மதுரை

மதுரையில் சேதம் அடைந்த சாலைகளில் மண்ணை போட்டு நிரப்புவதால் அந்த பகுதி தூசு மண்டலமாக காட்சியளிக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர்.

மதுரை மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக தென்மேற்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. மதுரை நகர் பகுதியில் தல்லாகுளம், விமான நிலையம், இடையபட்டி, மதுரை வடக்கு உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவு கன மழை பதிவாகியுள்ளது.

இந்த நிலையில் சில நாள் பெய்த கனமழையால் மதுரையின் பல பகுதிகளில் சாலைகள் குண்டும், குழியுமாக காட்சி அளிக்கின்றது. மேலும் மதுரை மாநகராட்சியின் விரிவாக்கப் பகுதிகளான திருப்பரங்குன்றம், அவனியாபுரம், பெருங்குடி, தபால் தந்தி நகர், ஆனையூர், திருப்பாலை உள்ளிட்ட பகுதிகளில் முக்கிய சாலைகள் மட்டுமின்றி வீதிகளிலும் செல்ல முடியாத நிலையில் பள்ளம், மேடாக காட்சி அளிக்கிறது.

தற்போது பாதாள சாக்கடை மற்றும் குடிநீர் குழாய் பதிக்கும் பகுதிகளில் உள்ள வீதிகளில் தோண்டப்பட்ட குழிகள் சரியாக மூடப்படாததால் பெரிய அளவில் பள்ளங்களும் ஏற்பட்டுள்ளன. இதனால் மோட்டார் சைக்கிள்கள் மற்றும் கார்களில் செல்ல முடியாமல் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் சில இடங்களில் மழை நீர் தேங்கியுள்ளதால் பொதுமக்கள் நடந்து செல்வதிலும் சிரமம் ஏற்பட்டுள்ளது.

மதுரையில் பீபீகுளம் சந்திப்பில் சில மாதங்களாகவே சாலை மிகவும் பழுதடைந்து பரிதாபமாக காட்சி அளிக்கிறது. ஒவ்வொரு வாரமும் அந்த பகுதியில் மண்ணை கொண்டு சரி செய்வதால் சாலைகளில் பஸ், லாரிகள் உள்ளிட்ட கனரக வாகனங்கள் செல்லும்போது அதிக அளவில் தூசி மண்டலம் ஏற்படுகிறது. இதனால் பின்னால் இருசக்கர வாகனத்தில் செல்லும் மக்கள் கடும் பாதிப்படைகிறார்கள்.

இதுபோல தல்லாகுளம், கோரிப்பாளையம், பைபாஸ் ரோடு, பெரியார் பஸ் நிலையம், தெப்பக்குளம், வில்லாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் சாலைகளில் மணல் குவியல் அகற்றப்படாமல் உள்ளன. இதனால் அந்த சாலைகளிலும் தூசி பரவல் அதிகரித்துள்ளது.

மாவட்ட நிர்வாகமும் மாநகராட்சியும் இணைந்து முக்கிய சாலைகளை உடனடியாக சரி செய்ய பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் சாலைகளில் ஏற்பட்டுள்ள பள்ளங்களில் மண்ணை கொண்டு மூடுவதை தவிர்த்து தார் மற்றும் ஜல்லி கலவையை அந்த இடங்களில் நிரப்பினால் மீண்டும் சாலைகள் பழுதாகாமலும், அதிக அளவில் தூசி எழும்பாமலும் இருக்கும் என்பதும் பொதுமக்களின் கருத்தாக உள்ளது.

எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து மதுரை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் பொதுமக்கள் போக்குவரத்திற்கு வசதியாக தரமான சாலைகளை அமைத்து தர வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் சாலைகளில் தேங்கியுள்ள மணல் குவியல்களை கூடுதல் பணியாளர்களை கொண்டு உடனடியாக அப்புறப்படுத்தவும் மாவட்ட நிர்வாகமும், மாநகராட்சியும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News