கூடுதல் பஸ் வசதி செய்து தரவேண்டும்
- வடபழஞ்சிக்கு கூடுதல் பஸ் வசதி செய்து தரவேண்டும்.
- காலை, மதியம், மாலை வேளைகளில் பஸ்கள் இயக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.
மதுரை
மதுரை அருகே உள்ளது வடபழஞ்சி ஊராட்சி. இவ்வூராட்சிக்குட்பட்ட முத்துப்பட்டி, நாகமலை புதூர் பகுதிகளில் சுமார் 1000-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்கள் பொது போக்கு வரத்தையே பிரதானமாக பயன்படுத்தி வந்தனர்.
மதுரை பெரியார் பஸ் நிலையத்தில் இருந்து வடபழஞ்சிக்கு காலை, மதியம், மாலை என 3 வேளைகளில் காளவாசல், நாகமலை புதுக்கோட்டை வழியாக அரசு பஸ் இயக்கப்பட்டு வந்தது.
கொரோனா தாக்கம் ஏற்பட்டபோது இந்த பஸ் சேவை நிறுத்தப்பட்டு காலை 6 மணிக்கு ஒரு பஸ் மட்டுமே இயக்கப்பட்டது. தற்போது வரை அந்த பஸ் மட்டுமே சென்று கொண்டி ருக்கிறது.
இதனால் போதிய பஸ் வசதி இல்லாமல் பொது மக்கள் பெரிதும் சிரமத்திற் குள்ளாகின்றனர். மேலும் இப்பகுதியில் காமராஜர் பல்கலைக்கழகம், தனியார் கல்லூரிகள் மற்றும் பள்ளி உள்ளன. வடபழஞ்சியில் இருந்து பள்ளி கல்லூரி செல்லும் மாணவ- மாணவிகள், வேலைக்கு செல்வோர் சுமார் 2 கிலோமீட்டர் நடந்து செல்லும் நிலை உள்ளது.
வடபழஞ்சியில் இருந்து கரடிபட்டி செல்லும் சாலை யில் அரசு உயர்நிலைப்பள்ளி, செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளிக்கு செல்லும் மாணவ -மாணவிகள், ஆசிரியர்கள் பள்ளிக்கு நடந்தே செல்லும் நிலையும் உள்ளது. கோடை விடுமுறைக்கு பின் நாளை மறுதினம் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் மீண்டும் காலை, மதியம், மாலை வேளைகளில் பஸ்கள் இயக்கப்பட வேண்டும் என்பதே இந்த மக்களின் கோரிக்கையாக உள்ளது.