உள்ளூர் செய்திகள்

பூத்தட்டு உள்ளிட்ட பொருட்களுடன் பக்தர்கள் ஊர்வலமாக வந்ததை படத்தில் காணலாம்.

முனியாண்டி சுவாமி கோவில் திருவிழா: ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு பிரியாணி விருந்து

Published On 2023-01-29 06:53 IST   |   Update On 2023-01-29 06:53:00 IST
  • இந்த விழாவிற்கு பக்தர்கள் ஒருவாரம் காப்புகட்டி விரதம் மேற்கொண்டனர்.
  • 150 ஆடுகள், 300-க்கும் மேற்பட்ட கோழிகள் முனியாண்டி சுவாமிக்கு பலியிடப்பட்டன.

மதுரை :

மதுரை மாவட்டம் வடக்கம்பட்டி கிராமத்தில் முனியாண்டிசுவாமி கோவில் உள்ளது. முனியாண்டி சுவாமிக்கு முழு உருவசிலை உள்ள கோவில்களில் இதுவும் ஒன்று.

ஆண்டுதோறும் தை மாதம் வளர்பிறை வெள்ளிக்கிழமை அன்று இக்கோவிலில் திருவிழா நடந்து வருகிறது. இந்த விழாவில் பக்தர்களுக்கு ஆடு, கோழிகளை பலியிட்டு பிரியாணி தயார் செய்து வழங்குவது வழக்கம்.

அதன்படி 88-வது ஆண்டாக நடைபெறும் இந்த விழாவிற்கு பக்தர்கள் ஒருவாரம் காப்புகட்டி விரதம் மேற்கொண்டனர். இந்நிலையில் நேற்று முன்தினம் காலை விரதம் மேற்கொண்ட பக்தர்கள் பால்குடம் எடுத்து சுவாமிக்கு அபிஷேகம் செய்து சிறப்பு பூஜைகள் நடத்தினர்.

தங்களது வீடுகளில் இருந்து தேங்காய், பழம், பூத்தட்டுகளை தலையில் சுமந்தபடி பக்தர்கள் ஊர்வலமாக கோவிலுக்கு வந்து தரிசனம் செய்தனர்.

பின்னர் பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய 150 ஆடுகள் மற்றும் 300-க்கும் மேற்பட்ட கோழிகள் முனியாண்டி சுவாமிக்கு பலியிடப்பட்டன. பின்னர் அவற்றை கொண்டு கோவிலில் அசைவ பிரியாணி தயார் செய்தனர். அந்த பிரியாணியை கோவிலுக்கு வந்த பக்தர்களுக்கு அன்னதானமாக பார்சல்களில் வழங்கினர்.

இந்த அன்னதானத்தில் கள்ளிக்குடி, வில்லூர், அகத்தாபட்டி உள்ளிட்ட அருகில் உள்ள 20-க்கும் மேற்பட்ட கிராமத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.

Similar News