வால்பாறை-சாலக்குடி சாலையில் கனமழையால் மண்சரிவு
- சுற்றுலா வாகனங்கள் செல்ல தடை
- மழுக்குப்பாறை சோதனை சாவடியின் இருபுறமும் வாகனங்கள் திருப்பி விடப்பட்டன
வால்பாறை,
கோவை மாவட்டம் வால்பாறையில் கடந்த 3 நாட்களாக கனமழை பெய்து வருகிறது.
இதேபோல கேரள மாநிலம் சாலக்குடி பகுதியிலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நேற்று வால்பாறை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் கனமழை கொட்டி தீர்த்தது.
இந்த மழையால் வால்பாறை நகரின் முக்கிய சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு மத்தியில் வாகனத்தை இயக்கி சென்றனர். தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியதால் மக்கள் அவதி அடைந்தனர்.
தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக வால்பாறையில் இருந்து சாலக்குடி செல்லும் சாலையில் பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்துள்ளன.
இந்த நிலையில் மழுக்குப்பாறை எஸ்டேட்டில் இருந்து அதிரப்பள்ளி அருவிக்கு செல்லும் வழியில் உள்ள அம்பலப்பாறை என்ற இடத்தில் மண் சரிவு ஏற்பட்டது. இதனால் அந்த வழியிலான போக்குவரத்து உடனடியாக நிறுத்தப்பட்டது.
இதையடுத்து சாலக்குடியில் இருந்து வரும் வழியில் உள்ள வாளச்சால் என்ற பகுதியிலும், வால்பாறையில் இருந்து செல்லும் வழியில் மழுக்குப்பாறை என்ற இடத்திலும் சோதனை சாவடிகளில் இருபுறங்களிலும் இருந்து வரும் வரும் சுற்றுலா வாகனங்கள் அனைத்தும் திருப்பி அனுப்பப்பட்டன.
மறு அறிவிப்பு வரும் வரை இந்த வழியில் சுற்றுலா வாகனங்களுக்கு தடை விதிப்பதாக திருச்சூர் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.