உள்ளூர் செய்திகள்

குருபரபள்ளி துணை மின்நிலையத்தில் கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி குத்துவிளக்கேற்றி, கணினி வாயிலாக திறன் உயர்த்தும் இயக்கத்தை தொடங்கி வைத்தார்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 8 ஆயிரத்து 386 பயனாளிகளுக்கு இலவச மின் வசதி வழங்கப்பட்டுள்ளது- கலெக்டர் தகவல்

Published On 2022-08-17 15:26 IST   |   Update On 2022-08-17 15:26:00 IST
  • புதிய மின் இணைப்புகள் வழங்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறார்.
  • தமிழ்நாடு மின்சார வாரியம் ரூ.803 கோடி செலவில் 2.13 லட்சம் ஏக்கர் விவசாய நிலத்தினை உள்ளடக்கி ஒரு லட்சம் விவசாய மின் இணைப்புகள் ஓராண்டில் வழங்கப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி,

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலமாக ஓசூர் ஆலூர் மற்றும் குருபரப்பள்ளி துணை மின் நிலையங்களில் ரூ.9.75 கோடி மதிப்பில் திறன் உயர்த்தும் பணிகளை தொடங்கி வைத்தார்.

அதையொட்டி கிருஷ்ணகிரி தாலுகா குருபரபள்ளி துணை மின்நிலையத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி, கணினி வாயிலாக திறன் உயர்த்தும் இயக்கத்தை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு மின்சார வாரிய மேற்பார்வை பொறியாளர் ஏஞ்சலா சகாயமேரி முன்னிலை வகித்தார்.

நிகழ்ச்சியில் கலெக்டர் பேசியதாவது:-

தமிழக முதல்-அமைச்சர் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் சார்பாக துணை

மின் நிலையங்கள் தரம் உயர்த்தும் பணிகள் மற்றும் புதிய மின் இணைப்புகள் வழங்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறார்.

அதன் அடிப்படையில் தற்போது முதல் -அமைச்சர் தமிழ்நாடு மின்சார வாரியம் மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மானக் கழகம் மின் தொடரமைப்புக் கழகம் சார்பாக, ஓசூர் தாலுகா ஆலூர் துணை மின் நிலையத்தில் ரூ.5.21 கோடி மதிப்பிலும், ஓசூர் துணை மின் நிலையம் 16 மெகாவாட்லிருந்து 25 மெகாவாட் வரை திறன் உயர்த்தல் பணி ரூ.2.13 கோடி மதிப்பிலும், குருபரப்பள்ளி துணை மின் நிலையத்தில் 16 மெகாவாட்லிருந்து 25 மெகாவாட் வரை திறன் உயர்த்துதல் ரூ.2.41 கோடி மதிப்பில் என மொத்தம் ரூ.9.75 கோடி மதிப்பில் திறன் உயர்த்தும் பணிகளை தொடங்கி வைத்துள்ளார்.

இதன் மூலம் விவசாய மற்றும் தொழில் நிறுவனங்க ளுக்கு மின்சாரம் சரியான முறையில் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. ஓசூர் தாலுகா ஆலூர் துணை மின்நிலையத்தின் மூலம் சுற்றியுள்ள கிராமங்களான புக்கசாகரம், ராமசந்திரபுரம் ஆகிய பகுதிகளும், குருபரப்பள்ளியிலிருந்து கிருஷ்ணகிரி மாவட்டம் உள்ள அனைத்து பகுதிகளுக்கும், கூடுதலாக மின்பரிமாற்றம் கிடைக்கும்.

தமிழ்நாடு மின்சார வாரியம் ரூ.803 கோடி செலவில் 2.13 லட்சம் ஏக்கர் விவசாய நிலத்தினை உள்ளடக்கி ஒரு லட்சம் விவசாய மின் இணைப்புகள் ஓராண்டில் வழங்கப்பட்டுள்ளது.

தமிழக முதல்- அமைச்சரின் சிறப்பு திட்டமான 1 லட்சம் மின்சார இணைப்பு வழங்கும் திட்டத்தின் கீழ் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 8,386 பயனாளிகளுக்கு (8 சதவிகிதம்) இலவச மின் வசதி வழங்கப்பட்டுள்ளது.

மாநில அளவில் மையப்படுத்தப்பட்ட மின்னகம் மின் நுகர்வோர் சேவை மையம் தொடங்கப்பட்ட 20.06.2021 முதல் 18.07.2022 வரை 9 லட்சத்து 82 ஆயிரம் அழைப்புகள் பதிவு செய்யப்பட்டு அதில் 9 லட்சத்து 72 ஆயிரத்து 180 அழைப்புகள் சரி செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு கலெக்டர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் செயற்பொறியாளர்கள் முத்துசாமி, வேலு, கவிதா, ஒன்றியக்குழுத் தலைவர் சரோஜினி பரசுராமன், ஒன்றியக்குழு உறுப்பினர் சந்திரன், ஊராட்சி மன்ற தலைவர் செந்தாமரை செந்தில்குமார் மற்றும் மின் வாரிய பணியாளர்கள் கலந்துக்கொண்டனர்.

Tags:    

Similar News