உள்ளூர் செய்திகள்

பட்டாவில் பெயர் நீக்க ரூ.25 ஆயிரம் லஞ்சம் வாங்கி கைதானபெண் கிராம நிர்வாக அதிகாரி

Published On 2023-09-05 10:48 GMT   |   Update On 2023-09-05 10:48 GMT
  • லஞ்சம் கொடுக்க விரும்பாத ஜெகநாதன் இதுகுறித்து நாமக்கல் லஞ்ச ஒழிப்பு துறை போலீசில் புகார் அளித்தார்.
  • மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத் துறை இன்ஸ்பெக்டர் நல்லம்மாள் மற்றும் போலீசார் தீபாவை கைது செய்தனர்.

பரமத்திவேலூர்:

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா பாண்டமங்கலம் பகுதியை சேர்ந்தவர் விஸ்வநாதன்.

இவரது மனைவி தீபா (43). இவர் கபிலர்மலை ஊராட்சி ஒன்றியம் கொந்தளம் ஊராட்சியில் கிராம நிர்வாக அலுவலராக வேலை பார்த்து வந்தார்.

இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த விவசாயி ஜெகநாதன் (45) என்பவர் பட்டாவில் உள்ள பூர்வீக சொத்தில் இருந்து பெயர் நீக்கம் செய்ய ஊராட்சி நிர்வாக அலுவலகத்தில் விண்ணப்பித்தார்.

இதையடுத்து கிராம நிர்வாக அலுவலர் தீபா, பட்டாவில் பெயர் நீக்கம் செய்ய ஜெகநாதனிடம் ரூ.25 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக தெரிகிறது. ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத ஜெகநாதன் இதுகுறித்து நாமக்கல் லஞ்ச ஒழிப்பு துறை போலீசில் புகார் அளித்தார்.

இதன் பேரில் லஞ்ச ஒழிப்பு போலீசார் ரசாயன பவுடர் தடவிய ரூபாய் நோட்டுகளை ஜெகநாதனிடம் கொடுத்து அதனை கிராம நிர்வாக அலுவலரிடம் கொடுக்குமாறு அனுப்பி வைத்தனர்.

அதன்படி நேற்று மதியம் ஜெகநாதன் கொந்தளம் கிராம நிர்வாக அலுவலகத்துக்கு சென்றார். அங்கிருந்த தீபாவிடம் ரசாயன பவுடர் தடவிய ரூ.25 ஆயிரத்தை கொடுத்தார். அதை வாங்கிய தீபா தனது மொபட்டிற்குள் பணத்தை வைத்துவிட்டு வந்தார்.

அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத் துறை இன்ஸ்பெக்டர் நல்லம்மாள் மற்றும் போலீசார் தீபாவை கைது செய்தனர்.

தொடர்ந்து தீபா மொபட்டில் வைத்திருந்த பணத்தை கைப்பற்றியதுடன் மொபட்டையும் பறிமுதல் செய்தனர்.

பின்னர் அவரை நாமக்கல் லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்துக்கு போலீசார் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். இதைதொடர்ந்து தீபாவை நாமக்கல் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் பெண்கள் கிளை சிறையில் போலீசார் அடைத்தனர். மேலும் அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் இன்று நாமக்கல் லஞ்ச ஒப்பு துறை போலீசார் தீபாவின் வீட்டிற்கு சென்று சோதனை நடத்தி விசாரணை நடத்துகின்றனர்.

Tags:    

Similar News