உள்ளூர் செய்திகள்

ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ. 5.88 கோடி தங்க நாணயங்கள் பறிமுதல்

Published On 2024-04-07 14:24 IST   |   Update On 2024-04-07 14:24:00 IST
  • தேர்தல் பறக்கும் படை அலுவலர் தலைமையிலான அலுவலர்கள், வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
  • 14 அட்டைப்பெட்டிகளில் மூடப்பட்ட நிலையில் பொருட்கள் இருந்தன.

காவேரிப்பட்டணம்:

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அருகே ஆவணங்களின்றி எடுத்து செல்லப்பட்ட, 5.88 கோடி ரூபாய் மதிப்பிலான தங்க நாணயங்களை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

தமிழகத்தில் வரும், 19ல், லோக்சபா தேர்தல் நடக்கிறது. வாக்காளர்களுக்கு பணம், பரிசுப்பொருட்கள் பட்டுவாடாவை தவிர்க்கும் வகையில், 50 ஆயிரத்திற்கு மேற்பட்ட பணம், பொருட்கள் எடுத்து செல்லப்படுவதை தேர்தல் அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.

இந்நிலையில் 11:30 மணியளவில், காவேரிப்பட்டணம் பி.டி.ஓ., அலுவலகம் எதிரில் கிருஷ்ணகிரி தர்மபுரி சாலையில் தேர்தல் பறக்கும் படை அலுவலர் சரவணன் தலைமையிலான அலுவலர்கள், வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

அப்போது, அவ்வழியே வந்த க்யூரல் கூரியர் நிறுவன பிக்கப் வேனை மடக்கி சோதனையிட்டனர். அதில், 14 அட்டைப்பெட்டிகளில் மூடப்பட்ட நிலையில் பொருட்கள் இருந்தன. இது குறித்து அதிகாரிகள் விசாரித்தபோது, அதில் காவேரிப்பட்டணம், திருப்பத்தூர், தர்மபுரி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஜூவல்லரிகளுக்கு ஓசூர், சிப்காட்டில் உள்ள டைட்டான் ஜூவல்லர்ஸிலிருந்து தங்க நாணயங்கள் எடுத்து செல்வதாக கூறியுள்ளனர். ஆனால் அதற்கான பில்கள் உள்பட உரிய ஆவணங்கள் இல்லை.

அவர்கள் கையில் வைத்திருந்த டெலிவரி ஆர்டர்களில் மட்டும், எடுத்து செல்லப்படும் தங்கத்தின் மதிப்பு, 5 கோடியே, 88 லட்சத்து, 14 ஆயிரம் ரூபாய் என இருந்தது. உரிய ஆவணங்களின்றி எடுத்து செல்லப்பட்ட தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், அவற்றை கிருஷ்ணகிரி ஆர்.டி.ஓ., பாபுவிடம் ஒப்பட்டைத்தனர். பிடிபட்ட தங்கத்தின் மதிப்பு கூடுதலாக இருப்பதால், சம்பந்தப்பட்டவர்கள், உரிய பில்கள், ஆவணங்களுடன் வருமான வரித்துறையிடம் ஒப்படைத்து அவர்களது பொருட்களை பெற்றுக்கொள்ளலாம் என அதிகாரிகள் கூறினர்.

Tags:    

Similar News