நூதன முறையில் செல்போன்,வெள்ளி செயினை பறித்த 5 பேர் கைது
- வேலாயுதம்பாளையம் அருகே நூதன முறையில் செல்போன், வெள்ளி செயினை பறித்த 5 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்
- பெண் குரலில் பேசி இளைஞரை வரவழைத்து கொள்ளையடித்தனர்
வேலாயுதம்பாளையம்,
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா பாண்டமங்கலம் சந்தைப்பேட்டை தெருவைச் சேர்ந்தவர் கண்ணன். இவரது மகன் சதீஷ்குமார்(வயது 30). இவர் வீட்டில் இருந்தபோது இவருக்கு ஹோண்டா ஆப் மூலம் பெண் குரலில் நைசாக ஆசை வார்த்தை கூறி பேசியுள்ளனர். பின்னர் சதீஷ்குமாரை கரூர் மாவட்டம் புகளூர் அருகே தட்டங்காடு பகுதியில் உள்ள தைலத்தோப்பு பகுதிக்கு வரவழைத்துள்ளனர். இதில் மயங்கிய சதீஷ்குமார் சம்பந்தப்பட்ட தட்டங்காடு தைலத்தோப்பு பகுதிக்கு இவர் மட்டும் தனியாக சென்றுள்ளார். அப்போது அங்கு தயாராக மறைந்து நின்று கொண்டிருந்த5 வாலிபர்கள் திடீரென சதீஷ்குமாரை பிடித்து சட்டை பாக்கெட்டில் வைத்திருந்த விலை உயர்ந்த செல்போனையும், அவர் கையில் அணிந்திருந்த வெள்ளி கை செயினையும் மிரட்டி பறித்துக் கொண்டு சதீஷ்குமாரை மிரட்டி விரட்டி அடித்து அனுப்பியுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த சதீஷ்குமார் இது குறித்து வேலாயுதம்பாளையம் போலீசில் புகார் செய்தார்
புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் வினோதினி வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினார். விசாரணையில் சதீஷ்குமாரை பெண் குரலில் பேசி வரவழைத்து புகளூர் ஹை ஸ்கூல் மேடு பகுதியை சேர்ந்த சரவணன் (20), அதே பகுதியை சேர்ந்த சூர்யா(21), விஜய்(19), மதுரை மாவட்டம் மேலூர் இந்திரா குடியிருப்பு காலனி பகுதியில் குடியிருந்து தற்பொழுது நாமக்கல் மாரியம்மன் கோவில் அண்ணா நகரில் இருந்து வரும் கார்த்திகேயன் (19), தளவாபாளையம் அருகே கிழக்கு தவுட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த ரூபன் (21) என்பது தெரியவந்தது.
அதன் அடிப்படையில் 5 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி கரூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு நீதிபதியின் உத்தரவின் பேரில் 5 பேரையும்சிறையில் அடைக்கப்பட்டனர்.