கரூர் தி.மு.க. பிரமுகர் வீட்டில் 12 மணி நேரத்துக்கும் மேலாக நடந்த வருமான வரித்துறை சோதனை
- மொத்தம் 80 இடங்களில் சோதனை நடந்து வருகிறது.
- அப்போது அவர்களுக்கு துப்பாக்கி ஏந்திய துணை ராணுவப்படை வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
நொய்யல்
தமிழக பொதுப் பணித்துறை அமைச்சராக இருப்பவர் எ.வ.வேலு. இவரது வீடு, கல்வி நிறுவனங்கள் மற்றும் பொதுப்பணித்துறை ஒப்பந்ததாரர்கள் வீடுகளில் நேற்று காலை முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மொத்தம் 80 இடங்களில் சோதனை நடந்து வருகிறது.
அந்த வகையில் கரூரிலும் நேற்று வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது புஞ்சை தோட்டக்குறிச்சியில் தி.மு.க. பிரமுகரான முன்னாள் கவுன்சிலர் சக்திவேல் வீட்டிலும் வருமானவரித்துறையினர் இரவு வரை சோதனை நடத்தினர்.
3 கார்களில் காலை 7.30 மணிக்கு வந்த அதிகாரிகள் சுமார் 12 மணி நேரத்துக்கும் மேலாக சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அவர்களுக்கு துப்பாக்கி ஏந்திய துணை ராணுவப்படை வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
இதே போல் கரூர் மாவட்டத்தில் மேலும் 3 இடங்களில் வருமானவரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.
கரூர் மாவட்டத்தில் 4 இடங்களில் நடந்து வந்த வருமான வரித்துறை சோதனை இரவும் நீடித்தது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.