உள்ளூர் செய்திகள்

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் வைகாசி விசாக திருவிழா

Published On 2022-06-07 09:22 GMT   |   Update On 2022-06-07 09:22 GMT
  • பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வெள்ளி காமதேனு வாகனத்தில் அம்மன் வீதி உலா
  • நள்ளிரவு வரை வழிநெடுகிலும் பக்தர்கள் வழிபாடு

கன்னியாகுமரி :

உலகப் புகழ்பெற்ற கோவில்களில் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலும் ஒன்று. இந்த கோவிலில் வைகாசி விசாக பெருந்திருவிழா கடந்த3-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இந்த திருவிழா வருகிற 12-ந்தேதி வரை 10 நாட்கள் தொடர்ந்து நடக்கிறது. 4-ம் திருவிழாவான நேற்று மாலை திருவாவடு துறை ஆதீன மண்டகப்படி நிகழ்ச்சியும் அதைத் தொடர்ந்து சமய உரையும் நடந்தது. பின்னர் பிரஜாபிதா பிரம்ம குமாரிகள் அமைப் பின் சார்பில் பக்தி பல்சுவை நிகழ்ச்சி நடந்தது.

இதில் சிறுவர்-சிறுமிகள் விநாயகர், முருகன், மதுரை மீனாட்சி அம்மன், சரஸ்வதி அம்மன், கன்னி யாகுமரி பகவதி அம்மன், கிருஷ்ணன், ராதை போன்ற தெய்வங்களின் வேட மணிந்த தத்ரூப காட்சி நடந்தது.

மேலும் நாட்டிய நடன நிகழ்ச்சிகளும் நடந்தது. அதன்பிறகு பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வெள்ளி காமதேனு வாகனத்தில் அம்மன் எழுந்தருளி மேள தாளங்கள் முழங்க வீதி உலா வந்த நிகழ்ச்சி நடந்தது.

கோவிலிலிருந்து புறப்பட்ட இந்த வாகன பவனி சன்னதி தெரு, தெற்கு ரத வீதி, மேல ரதவீதி, வடக்கு ரதவீதி, நடுத்தெரு, கீழரத வீதி வழியாக கன்னியம்பலம் மண்டபத்தை சென்றடைந்தது.

அந்த மண்டபத்துக்குள் அம்மன் சிறிது நேரம் இளைப்பாறும் நிகழ்ச்சி நடந்தது. அதன்பிறகு அம்மனுக்கு தீபாராதனை நடந்தது. பின்னர் அங்கி ருந்து வாகன பவனி புறப்பட்டு சன்னதி தெரு வழியாக மீண்டும் கோவிலை வந்தடைந்தது.

நள்ளிரவு வரை வழிநெடுகிலும் பக்தர்கள் வாக னத்தில் எழுந்தருளி இருந்த அம்மனுக்கு தேங்காய் பழம் படைத்து "திருக்கணம்"சாத்தி வழிபட்டனர். இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

5-வது நாளான இன்று அதிகாலை 5 மணி மற்றும் காலை 10 மணிக்கு சினிமா பட தயாரிப்பாளர்கள் கே.எஸ். போஸ், விஷ்ணுராம் ஆகியோர் ஏற்பாட்டில் பகவதி அம்மனுக்கு எண்ணெய், பால், தயிர், இளநீர், பன்னீர், நெய், தேன், மஞ்சள் பொடி, சந்தனம், களபம், குங்குமம், பஞ்சாமிர்தம் மற்றும் புனித நீரால் சிறப்பு அபிஷேகம் நடந்தது.

இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்ட னர். முன்னதாக சிம்ம வாகனத்தில் அம்மன் எழுந்தருளி வீதி உலா வந்த நிகழ்ச்சி நடந்தது. காலை 11 மணிக்கு அம்மனுக்கு தங்கக் கிரீடம் வைரக்கல் மூக்குத்தி மற்றும் தங்க ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டு சந்தன காப்பு அலங்காரத்துடன் பக்தர்களுக்கு அருள்பாலித்த நிகழ்ச்சி நடந்தது. அதைத் தொடர்ந்து 11-30 மணிக்கு அம்மனுக்கு அலங்கார தீபாராதனையும் பகல் 12 மணிக்கு அன்னதானமும் நடந்தது. மாலை 6 மணிக்கு சமய உரையும் இரவு 7 மணிக்கு புஷ்பாபிஷேகமும் நடக்கிறது.

அதனைத் தொடர்ந்து 8 மணிக்கு பக்தி இன்னிசை கச்சேரியும் 9 மணிக்குசிம்ம வாகனத்தில் அம்மன் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடக்கிறது.

Tags:    

Similar News