உள்ளூர் செய்திகள்

தக்கலை அருகே ஆன் லைன் மோசடி கும்பலால் தற்கொலை செய்த மாணவர் வீட்டிற்கு வட்டி வசூலிக்க வந்த வாலிபரை மடக்கி பிடித்த பொதுமக்கள்

Published On 2023-11-02 13:08 IST   |   Update On 2023-11-02 13:08:00 IST
  • சைபர் கிரைம் போலீசார் விசாரணை
  • 3 மாதம் லோன் கட்டாமல் பாக்கி இருப்பதாக கூறி உள்ளார்.

தக்கலை :

தக்கலை அருகே உள்ள திருவிதாங்கோட சேவியர்புரம் அருகே வசித்து வருபவர் ஸ்ரீதரன் (வயது 50). இவர் திக்கணங்கோடு ஊராட்சியின் முன்னாள் கவுன்சிலர். இவரது மனைவி அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். இவர்களது ஒரே மகன் குருநாத் (21), நாகர்கோவிலில் உள்ள ஒரு கல்லூரியில் இளங்கலை 3-ம் ஆண்டு படித்து வந்தார். இவர் சம்பவத்தன்று வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்தார்.

தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், குருநாத் ஆன்லைனில் லோன் வாங்கி இருப்பதும், ஆன்லைன் டிரேடிங்கில் ஈடுபட்டதும் தெரிய வந்தது. கடன் தொகையை அவர் திருப்பி கட்டிய போதும், இன்னமும் வட்டி கட்ட வேண்டி உள்ளது என்று தொடர்ந்து பல்வேறு ஆன்லைன் எண்களில் இருந்து மிரட்டல் வந்துள்ளது.

மேலும் மோசடி கும்பல் குருநாத்தின் புகைப்படத்தை மார்ஃபிங் செய்து அவர் நிர்வாணமாக இருப்பது போன்று சித்தரித்து அவருக்கே அனுப்பி உடனடியாக நாங்கள் சொல்லும் பணத்தை நீ கட்டாவிட்டால் இந்த புகைப்படத்தை இன்டர்நெட்டில் பரவ விடுவதோடு உனது உறவினர்கள், தாய்-தந்தை அனைவருக்கும் அனுப்பி வைப்போம் என்று மிரட்டியதால் தான் குருநாத் தற்கொலை முடிவை எடுத்திருப்பது விசாரணையில் தெரியவந்தது.

ஆனால் மிரட்டல் விடுத்தது யார்? என்பது பற்றிய சரியான தகவல் கிடைக்காமல் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் நேற்று காலை குருநாத்தின் வீட்டுக்கு, ஒரு வாலிபர் வந்துள்ளார். அவர் 3 மாதம் லோன் கட்டாமல் பாக்கி இருப்பதாக கூறி உள்ளார். அவரை அந்தப் பகுதி மக்கள் சிறைபிடித்து வைத்தனர். பின்னர் தக்கலை போலீசுக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் விரைந்து சென்று அந்த வாலிபரை பிடித்து, சைபர் கிரைம் போலீசாரிடம் ஒப்படைத்தனர். குருநாத் இறந்தது கூட தெரியாமல் வாலிபர் லோன் வசூல் செய்ய வந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Tags:    

Similar News