உள்ளூர் செய்திகள்

களியக்காவிளை அருகே அனுமதி இல்லாமல் பாறைகள் உடைப்பு - 2 வாகனங்கள் பறிமுதல்

Published On 2022-07-27 11:57 IST   |   Update On 2022-07-27 11:57:00 IST
  • பெரிய பெரிய பாறைகளை உடைத்து சிலர் வாகனத்தில் கடத்துவது தெரிய வந்தது.
  • போலீசாரை பார்த்ததும் சமூக விரோதிகள் பாறை உடைக்க பயன்படுத்திய வாகனத்தை போட்டு விட்டு தப்பி ஓடி விட்டனர்.

கன்னியாகுமரி :

குமரி மாவட்டத்தில் பாறைகளை உடைத்து கடத்துவதும், செம்மண் கடத்துவதும் தொடர்கதையாக நடந்து வருகிறது.

கடத்தலில் ஈடுபடும் வாகனங்களை பறிமுதல் செய்யவும் கடத்தலில் ஈடுபடுவோரை கைது செய்யவும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத், போலீசாருக்கு உத்தரவிட்டு உள்ளார்.

இந்த நிலையில் களியக்காவிளை போலீசார் குழித்துறை அருகே பழவார் பகுதிக்கு ரோந்து சென்றனர். அப்போது அங்கு பெரிய பெரிய பாறைகளை உடைத்து சிலர் வாகனத்தில் கடத்துவது தெரிய வந்தது.

இதை தொடர்ந்து பாறைகள் உடைக்க பயன் படுத்திய வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்து ஓட்டுநரையும் கைது செய்தனர். மேலும் களியக்காவிளை அருகே படந்தாலுமூடு பகுதியில் சென்ற போது அங்கும் சில சமூக விரோதிகள் பாறைகளை உடைப்பது தெரியவந்தது.

போலீசாரை பார்த்ததும் சமூக விரோதிகள் பாறை உடைக்க பயன்படுத்திய வாகனத்தை போட்டு விட்டு தப்பி ஓடி விட்டனர். போலீசார் அந்த வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.

பின்னர் 2 வாகனங்களையும் போலீஸ் நிலையம் கொண்டு சென்று வாகனங்கள் மீதும் கைது செய்த டிரைவர் மீதும் வழக்கு பதிவு செய்தனர். தொடர்ந்து டிரைவரை சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News