உள்ளூர் செய்திகள்

பள்ளியாடி பழைய பள்ளி அப்பா திருத்தலத்தில் சர்வ மத பிரார்த்தனை-சமபந்தி விருந்து

Published On 2023-03-21 12:13 IST   |   Update On 2023-03-21 12:13:00 IST
  • மும்மதத்தை சேர்ந்த மூவரும் இணைந்து சர்வ மத பிரார்த்தனையை தொடங்கி வைத்தனர்.
  • அனைத்து மதத்தினை சேர்ந்தவரும் இங்கு வந்து பிரார்த்தனை செய்து செல்கின்றனர்.

கன்னியாகுமரி :

குமரி மாவட்டத்தில் புகழ்பெற்ற பள்ளியாடி பழைய பள்ளி அப்பா திருத்தலத்தில் மத நல்லிணக்க விழா கடந்த 19-ந் தேதி தொடங்கியது.

திருத்தலத்தில் சர்வ மத பிரார்த்தனை மற்றும் சமபந்தி விருந்து விழா நேற்று நடைபெற்றது.சர்வ மத பிரார்த்தனையில் சுவாமிதோப்பு கேப்டன் சிவா திருவடிகள், பள்ளியாடி திருஇருதய ஆலய பங்குத்தந்தை ஆரோக்கியசாமி, சாமியார் மடம் ஜமாத் அப்துல் பஷீர் ஆகிய மும்மதத்தை சேர்ந்த மூவரும் இணைந்து சர்வ மத பிரார்த்தனையை தொடங்கி வைத்தனர்.

பின்னர் பள்ளியாடி பழைய பள்ளி அப்பா திருத்தலத்தில் சமபந்தி விருந்து தொடங்கி வைக்கப்பட்டது. இந்த சமபந்தி விருந்தானது நேற்று முழுவதும் தொடர்ந்து நடைபெற்றது.

பள்ளியாடி பழைய பள்ளி அப்பா திருத்தலத்தில் தீப ஒளியினால் இறைவனை பிரார்த்தனை செய்வது இத்திருத்தலத்தின் சிறப்பம்சமாகும். இங்கு எண்ணை, திரி, மெழுகுவர்த்தி, ஊதுபத்தி போன்ற பொருட்களால் அனைத்து மதத்தினரும் அவரவர் முறைப்படி பிரார்த்தனை செய்கின்றனர்.

லட்சக்கணக்கான மக்கள் மதம், இனம், மொழி வேறுபாடு இன்றி தரும் காணிக்கை பொருட்களை சேர்த்து சமைத்து இங்கு வரும் பொது மக்களுக்கு சமபந்தி விருந்தாக சிறப்புடன் வழங்கப்படுகிறது. நூற்றாண்டுகள் பழக்கமுடைய மிகப்பெரிய புளிய மரத்தின் கீழ் இத்திருத்தலம் அமைந்துள்ளது சிறப்பம்சமாகும். அனைத்து மதத்தினை சேர்ந்தவரும் இங்கு வந்து பிரார்த்தனை செய்து செல்கின்றனர்.

இந்நிகழ்ச்சியில் பழைய பள்ளி அப்பா திருத்தல அறக்கட்டளை பொதுச் செயலாளர் குமார், தலைவர் பால்ராஜ், பொருளாளர் சுந்தர்ராஜ், விளவங்கோடு தாசில்தார் பத்மகுமார், வாழ்வச்ச கோஷ்டம் பேரூராட்சி தலைவர் ஜான் டென்சிங், பள்ளியாடி ராதாகிருஷ்ணன், செயற்குழு உறுப்பினர் புகாரி, உட்பட பல்வேறு மதத்தை சேர்ந்த நபர்களும் கலந்து கொண்டு சிறப்பித்த னர்.

மேலும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள பொதுமக்களும் இங்கு வந்து சமபந்தி விருந்தில் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News