மாவட்ட சுற்றுலாத்துறை சார்பில் கன்னியாகுமரி கடற்கரையில் பட்டம் விடும் விழா
- 4-ந்தேதி முதல் 3 நாட்கள் நடக்கிறது
- விழாவில் ஏராளமான பலவண்ண பட்டங்கள் பறக்க விடப்படுகின்றன
கன்னியாகுமரி :
குமரி மாவட்ட சுற்றுலாத்துறையும், மாவட்ட நிர்வாகமும் இணைந்து சுற்றுலா பயணிகள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கன்னியாகுமரி மற்றும் சொத்தவிளை கடற்கரை பகுதியில் பட்டம் பறக்க விடும் விழாவை வருகிற 4-ந்தேதி முதல் 6-ந்தேதி வரை 3 நாட்கள் நடத்துகிறது.
கன்னியாகுமரி சன்செட் பாயிண்ட் கடற்கரை பகுதியில் வருகிற 4-ந் தேதி பகல் 12 மணிக்கு நடக்கும் பட்டம் பறக்க விடும் விழாவை குமரி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் தொடங்கி வைக்கிறார். அதனைத்தொடர்ந்து சொத்தவிளை கடற்கரை பகுதியில் 5 மற்றும் 6 ஆகிய தேதிகளில் இந்த பட்டம் பறக்க விடும் விழா நடக்கிறது.
இந்த விழாவில் ஏராளமான பலவண்ண பட்டங்கள் பறக்க விடப்படுகின்றன. இந்த பட்டங்கள் வானத்தில் வர்ண ஜாலங்கள் காட்டுகின்றன. இதற்கான ஏற்பாடுகளை குமரி மாவட்ட சுற்றுலா அலுவலர் சதீஷ்குமார் மற்றும் உதவி சுற்றுலா அலுவலர் கீதா ராணி ஆகியோர் செய்து வருகிறார்கள்.