உள்ளூர் செய்திகள்

133 அடி உயர திருவள்ளுவர் சிலையில் மழையின் காரணமாக பராமரிப்பு பணி நடைபெறாமல் பாதியில் நிற்பதை படத்தில் காணலாம்

மழை தொடர்ந்து நீடிப்பதால் கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலையில் பூசப்பட்ட காகிதகூழ் தண்ணீரில் கரைந்து நாசம்

Published On 2022-11-16 07:37 GMT   |   Update On 2022-11-16 07:37 GMT
  • கடந்த 5 மாதங்களாக திருவள்ளுவர் சிலையை பார்வையிட முடியாமல் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர்.
  • சிலை பராமரிப்பு பணி மேலும் ஒருமாத காலம் தாமதமாகலாம் என்று சுற்றுலா வளர்ச்சிக் கழக அதிகாரி கள் தெரிவித்தனர்.

கன்னியாகுமரி:

கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள பாறையில் கடந்த 2000-ம் ஆண்டு 133 அடி உயர திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்டது. இந்த சிலை கடலின் நடுவே நிறுவப்பட்டுள்ளதால் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை பராமரிப்பு பணிகள் நடைபெறுவது வழக்கம். இதன்படி உப்புக் காற்றால் பாதிக்கப்பட்டிருக்கும் சிலை முழுவதும் சுத்தம் செய்யப்பட்டு சிலையில் உள்ள உப்புத்தன்மை நீக்கப்பட்டு பின்னர் ரசாயன கலவை பூசப்படும்.

இதன் மூலம் சிலை உப்புக் காற்றினால் சிலை சேதமடையாமல் நீண்ட காலம் நீடித்து நிற்கும். அதன்படி கடந்த ஜூன் மாதம் 6-ந்தேதி திருவள்ளுவர் சிலை பராமரிப்பு பணி தொடங்கியது. சிலையை சுற்றிலும் இரும்பு சாரங்கள் அமைக்கப்பட்டு சுமார் 50-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் தினமும் இந்த பராமரிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த சிலையில் உள்ள உப்புத் தன்மையை அகற்றுவதற்காக தற்போது சிலையை சுற்றிலும் காகிதகூழ் ஓட்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்த சிலையின் மீது ஒட்டப்பட்ட காகிதத்தை ரசாயன பரிசோதனைக்கு உட்படுத்தி உப்பு படிந்திருக்கும் அளவு கண்டறியப்படும். சிலையில் ஒட்டப்படும் காகிதகூழ் பி.எச். வேல்யூ 7 என்ற அளவில் இருந்தால், அதன் பின்னர் ஜெர்மனியில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ரசாயன கலவை சிலையின் மீது பூசப்படும்.

இந்த நிலையில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. இதன் காரணமாக சிலையின் மீது ஒட்டப்பட்டு இருந்த காகிதகூழ் மழையில் நனைந்து தண்ணீரில் கரைந்து சேதமடைந்து விட்டன. இதனால் லட்சக்கணக்கில் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக மழை குறைந்த பின்னர் மீண்டும் காகிதகூழ் ஒட்டப்பட்டு அதன் பின்னர்தான் பராமரிப்பு பணிகள் தொடங்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதனால் கடந்த 6-ந்தேதி முடிய வேண்டிய சிலை பராமரிப்பு பணி மேலும் ஒருமாத காலம் தாமதமாகலாம் என்று சுற்றுலா வளர்ச்சிக் கழக அதிகாரி கள் தெரிவித்தனர். இதற்கிடையே கன்னியாகுமரியில் சபரிமலை அய்யப்ப பக்தர்கள் சீசன் தொடங்கியுள்ளதால் நவம்பர், டிசம்பர், ஜனவரி மாதங்களில் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகமாக இருக்கும். ஆனால் கடந்த 5 மாதங்களாக திருவள்ளுவர் சிலையை பார்வையிட முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்லும் சுற்றுலாப் பயணிகள் திருவள்ளுவர் சிலையை பார்வையிட மேலும் ஒரு மாதம் தாமதமாகலாம் என்று தெரிய வருகிறது.

Tags:    

Similar News