உள்ளூர் செய்திகள்

முட்டத்தில் மீன் வண்டியில் கடத்திய 1000 லிட்டர் மானிய மண்எண்ணை பறிமுதல்

Published On 2023-11-15 06:55 GMT   |   Update On 2023-11-15 06:55 GMT

குளச்சல், 

மீனவர்களின் வள்ளங்களுக்கு அரசு மானிய விலையில் மீனவர் கூட்டுறவு சங்கங்கள் மூலமாக மண்எண்ணை வழங்குகிறது. சிலர் இதனை வாங்கி பதுக்கி வைத்து கள்ளச்சந்தையில் விற்பனை செய்வதாக புகார்கள் எழுந்துள்ளது.

இந்தநிலையில் நேற்று குளச்சல் மரைன் சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ் தலைமையிலான போலீசார் மணவாளக்குறிச்சி, கடியபட்டணம், முட்டம் பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுப்பட்டனர். முட்டம் சோதனைச்சாவடி அருகே செல்லும்போது, சந்தேகத்திற்கிடமாக ஒரு மீன் கூண்டு வண்டி வந்தது.

உடனே போலீசார் அந்த வண்டியை நிறுத்தினர். அப்போது டிரைவர் மற்றும் வண்டியிலிருந்த ஒருவர், வண்டியை சாலையோரம் நிறுத்தி விட்டு தப்பியோட முயற்சித்தனர். போலீசார் அவர்களை மடக்கிப் பிடித்தனர்.

பின்னர் மீன் கூண்டு வண்டியை திறந்து பார்க்கும்போது, வண்டிக்குள் 30 கேன்களில் சுமார் 1000 லிட்டர் மானிய மண்எண்ணை இருந்தது தெரிய வந்தது. போலீசார் அவற்றை பறிமுதல் செய்து, மீன் வண்டியில் வந்த 2 பேரையும் குளச்சல் மரைன் போலீஸ் நிலையம் கொண்டு வந்தனர். பின்னர் மண்எண்ணை மற்றும் பிடிபட்ட இருவரையும் மாவட்ட குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு துறையினரிடம் ஒப்படைத்தனர்.

Tags:    

Similar News