உள்ளூர் செய்திகள்

தக்கலை அருகே கால்வாயில் பிணமாக மிதந்த தொழிலாளி

Published On 2023-09-26 07:20 GMT   |   Update On 2023-09-26 07:20 GMT
  • மர்மமாக இறந்துகிடந்தது குறித்து போலீசார் விசாரணை
  • போதையில் கால்வாயில் தவறி விழுந்ததால் இறந்தாரா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தக்கலை :

தக்கலை அருகே உள்ள குமாரபுரம் படப்பகுளம் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ் (வயது 45), கட்டிட தொழிலாளி. இவருக்கு திருமணமாகி மனைவி பிரேமலதா மற்றும் 3 குழந்தைகள் உள்ளனர்.

சுரேசுக்கு மது பழக்கம் இருந்து வந்தது. அடிக்கடி மது அருந்தி வந்ததால் குடும்ப தகராறு ஏற்பட்டது. இதன் காரணமாக பிரேமலதா தனது குழந்தைகளுடன் கணவரை பிரிந்து சென்று விட்டார். இதனால் சுரேஷ் தனியாக வசித்து வந்தார்.

தினமும் காலையில் வேலைக்கு செல்லும் அவர், மாலையில் மது அருந்தியபடி வருவாராம். நேற்று மாலையும் சுரேஷ் மது அருந்திய நிலையில் வீட்டுக்கு வந்துள்ளார். இந்த நிலையில் இன்று காலை வீட்டின் அருகே உள்ள கால்வாயில் அவர் பிணமாக கிடந்துள்ளார்.

இதனை அந்த வழியே சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து கொற்றிகோடு போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ராஜசேகர் மற்றும் போலீசார் சம்பவ இடம் விரைந்து வந்தனர்.

அவர்கள் கால்வாயில் பிணமாக கிடந்த சுரேஷ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தக்கலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவரது மனைவிக்கும் தகவல் கொடுத்தனர்.

வீட்டுக்கு சென்ற சுரேஷ் கால்வாயில் பிணமாக கிடந்தது எப்படி? என்பது மர்மமாக உள்ளது. அவரை யாராவது அழைத்துச் சென்று தாக்கி இருக்கலாமா? அல்லது போதையில் கால்வாயில் தவறி விழுந்ததால் இறந்தாரா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News