உள்ளூர் செய்திகள்

ராஜாக்கமங்கலத்தில் இன்று பழுதான சாலையால் விபத்தில் சிக்கிய மாணவி

Published On 2023-03-20 06:54 GMT   |   Update On 2023-03-20 06:54 GMT
  • சீரமைக்க வலியுறுத்தி பாதிரியார் தலைமையில் பொதுமக்கள் போராட்டம்
  • சாலையை சீரமைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.

கன்னியாகுமரி :

ராஜாக்கமங்கலம் துறை வழியாக செல்லும் மேற்கு கடற்கரை சாலை, கடந்த சில மாதங்களாக குண்டும் குழியுமாக காணப்பட்டு வருகிறது.

குடிநீர் குழாய்க்காக தோண்டப்பட்ட பள்ளங்கள் மூடப்படாததால் தான் சாலை இந்த நிலையில் இருப்பதாக அந்தப் பகுதி மக்கள் குற்றம் சாட்டி வந்தனர். மேலும் சாலையை சீரமைக்கவும் அவர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இருப்பினும் கடந்த 3 மாதங்களாக சாலை சீரமைக்கப்படாமலேயே இருந்து வருகிறது. குண்டும் குழியுமான சாலையால் அடிக்கடி விபத்துகளும் நடந்து வருகின்றன. இது வரை இந்த சாலையில் 7 பேர் விபத்தில் சிக்கி உள்ளனர்.

இந்த சாலை வழியாக பள்ளி, கல்லூரி மாணவிகள் சென்று வருகின்றனர். இன்று காலை நாகர்கோவிலில் உள்ள ஒரு கல்லூரியில் படிக்கும் மாணவி ஒருவர், இந்த சாலை வழியாக இரு சக்கர வாகனத்தில் கல்லூரிக்கு சென்றார்.

அப்போது எதிர்பாராதவிதமாக அவரது வாகனம் சாலையில் விபத்துக்குள்ளானது. இதில் மாணவி படுகாயம் அடைந்தார். உடனடியாக அவர் ஆம்புலன்சு மூலம் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

இந்த நிலையில் சாலை சீரமைக்கப்படாததை கண்டித்து இன்று காலை பாதிரியார் சூசை ஆண்டனி தலைமையில் அந்தப் பகுதி மக்கள் திரண்டனர். அவர்கள் விபத்துகள் அடிக்கடி ஏற்படுவதை கருத்தில் கொண்டு, உடனடியாக சாலையை சீரமைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.

இந்தப் போராட்டத்தில் 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். மறியல் குறித்த தகவல் கிடைத்ததும் ராஜாக்கமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் காந்திமதி தலைமையில் போலீசார் சம்பவ இடம் விரைந்து வந்தனர். அவர்கள் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். இந்தப் போராட்டம் காரணமாக அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News