உள்ளூர் செய்திகள்

மண்டைக்காடு கோவிலில் திரளான பக்தர்கள் அம்மன் வழிபாடு

Published On 2023-08-16 12:14 IST   |   Update On 2023-08-16 12:14:00 IST
  • ஆடி கடைசி செவ்வாய்க்கிழமையை முன்னிட்டு நடந்தது
  • கோவில் சன்னதி, கடற்கரை, பொங்கலிடும் பகுதி ஆகிய இடங்களில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.

கன்னியாகுமரி :

குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களில் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலும் ஒன்று. இங்கு தினமும் பக்தர்களின் கூட்டம் நிறைந்து காணப்படும். செவ்வாய், வெள்ளி, ஞாயிறு மற்றும் பவுர்ணமி நாட்களில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் மண்டைக்காட்டிற்கு வந்து கடலில் தீர்த்தமாடி பொங்கலிட்டு அம்மனை வழிபடுவர்.

இந்நிலையில் ஆடி மாதம் முதல் செவ்வாய்க்கிழமை முதல் தினமும் மண்டைக்காட்டில் பக்தர்களின் கூட்டம் அலைமோதி வருகிறது. நேற்று ஆடி மாதம் கடைசி செவ்வாய்க்கிழமை என்பதால் காலை முதலே மண்டைக்காட்டில் பக்தர்கள் குவிந்தனர். அவர்கள் கடலில் தீர்த்தமாடி பொங்கலிட்டு அம்மனை வழிபட்டனர். இதனால் கோவில் சன்னதி, கடற்கரை, பொங்கலிடும் பகுதி ஆகிய இடங்களில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.

உச்சக்கால பூஜையின்போது பெண்கள் பல்லாயிரக்கணக்கானோர் நீண்ட வரிசையில் நின்று அம்மனை வழிபட்டனர். தக்கலை, அழகியமண்டபம் மற்றும் திங்கள்நகருக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டிருந்தது.

Tags:    

Similar News