உள்ளூர் செய்திகள்

ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் நன்கொடை வசூலில் ஈடுபட்ட 2 பேர் சிக்கினர்

Published On 2023-09-18 09:08 GMT   |   Update On 2023-09-18 09:08 GMT
  • ரூ.50 ஆயிரம் வரை பணம் வசூல் செய்தனர்.
  • மாணவர்களும், பயிற்சி டாக்டர்களும், பொதுமக்களும் சுற்றி வளைத்து பிடித்தனர்.

நாகர்கோவில் :

நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு நேற்று மாலை ஒரு ஆணும், பெண்ணும் வந்தனர். அவர்கள் ஆஸ்பத்திரி ஊழியர்களிடமும், டாக்டர்களிடமும் தாங்கள் தனியார் தொண்டு நிறுவனத்தில் இருந்து வருவதாகவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்ய ஏதாவது பணம் தருமாறும் கூறினார்கள். அதை உண்மை என்று நம்பி பயிற்சி டாக்டர்களும், மருத்துவர்களும் பணம் கொடுத்ததாக தெரிகிறது. அந்த வகையில் ரூ.50 ஆயிரம் வரை பணம் வசூல் செய்தனர்.

இதற்கிடையே சம்பந்தப்பட்ட தொண்டு நிறுவனம் உண்மைதானா என்று ஆன்லைனில் டாக்டர்கள் சோதனை செய்தனர். அப்போது அது போலி தொண்டு நிறுவனம் என்பது தெரியவந்தது. உடனே அந்த பெண்ணையும், ஆணையும் மாணவர்களும், பயிற்சி டாக்டர்களும், பொதுமக்களும் சுற்றி வளைத்து பிடித்தனர். பின்னர் ஆசாரிபள்ளம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன்பேரில் போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் பிடிபட்ட ஆண் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்தவர் என்பதும், பெண் பொள்ளாச்சி பகுதியை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதுகுறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பயிற்சி டாக்டர்கள் புகார் அளித்துள்ளனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News