உள்ளூர் செய்திகள்

சர்வதேச யோகா தினத்தையொட்டி நாளை மறுநாள் கன்னியாகுமரி முக்கடல் சங்கமம் கடற்கரையில் மெகா யோகா பயிற்சி

Published On 2022-06-15 13:54 IST   |   Update On 2022-06-15 13:54:00 IST
மத்திய மந்திரி எல்.முருகன்- அமைச்சர் மனோதங்கராஜ் பங்கேற்பு

கன்னியாகுமரி :

உலகம் முழுவதும் சர்வதேச யோகா தினம் வருகிற 21-ந்தேதி கொண்டாடப்படுகிறது.

இந்த சர்வதேச யோகா தினத்தையொட்டி தமிழக மீன்வளத்துறை மற்றும் கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி நிர்வாகம்ஆகியவை இணைந்து மெகா யோகா பயிற்சியை கன்னியா குமரியில் முக்கடலும் சங்க மிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித்துறை கடற்கரை பகுதியில் நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) மாலை 4 மணிக்கு நடத்துகிறது.

இந்த நிகழ்ச்சிக்கு தமிழக தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தலைமை தாங்குகிறார். தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் ஜவஹர், குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் ஆகியோர் முன்னிலை வகிக்கிறார்கள். இந்த யோகா பயிற்சியை மத்திய மந்திரி எல்.முருகன் தொடங்கி வைக்கிறார்.

இதில் மாணவ-மாணவிகள், இளைஞர்கள், மீனவர்கள், அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் என சுமார் 500 பேர் கலந்து கொண்டு யோகா பயிற்சி செய்கிறார்கள். இதற்கான ஏற்பாடுகளை மீன்வளத் துறையினர் மற்றும் கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி நிர்வாகத்தினர் இணைந்து செய்து வருகிறார்கள்.

Tags:    

Similar News