உள்ளூர் செய்திகள்

கழிவுநீர் ஓடையை மேயர் மகேஷ் ஆய்வு செய்த காட்சி.

நாகர்கோவிலில் மழை நீர் வடிகாலில் கழிவு நீர் திறந்துவிடும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை

Published On 2023-01-02 09:14 GMT   |   Update On 2023-01-02 09:14 GMT
  • அதிகாரிகளுக்கு மேயர் மகேஷ் உத்தரவு
  • வணிக நிறுவனங்கள் கண்டிப்பாக அவர்களது இடத்திலேயே கழிவு நீரை உறிஞ்சு குழி அமைத்து அதில் விட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நாகர்கோவில்:

நாகர்கோவில், கலெக்டர் அலுவலகம் எதிரே உள்ள வணிக நிறுவனங்களில் இருந்து மழை நீர் வடிகாலில் கழிவு நீரை திறந்து விடுவதாகவும், இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதாகவும் மேயருக்கு தொடர்ந்து புகார்கள் வந்தது.

இதையடுத்து மேயர் மகேஷ் இன்று காலை டெரிக் சந்திப்பு முதல் கலெக்டர் அலுவலகம் வரை உள்ள மழைநீர் வடிகாலை பார்வையிட்டார். அப்போது மழைநீர் வடிகாலில், கழிவுநீர் தேங்கி நிற்பதை கண்டார்.

இதனால் சுகாதார பாதிப்பு ஏற்படும் என்பதால் வணிக நிறுவன உரிமையாளர்களிடம் மழை நீர் வடிகாலில் இனி கழிவுநீர் விடக்கூடாது என கேட்டுக்கொண்டார்.

மேலும் மாநகராட்சி அதிகாரிகளிடம் மழைநீர் வடிகாலில், கழிவுநீர் திறந்து விடும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், தண்ணீர் தேங்காத வகையில் அடைப்புகளை சரி செய்யவும் உத்தரவிட்டார். பின்னர் மேயர் மகேஷ் கூறியதாவது:-

கலெக்டர் அலுவலகம் முன்பு ஏராளமான வணிக நிறுவனங்கள் உள்ளன. கடந்த 25 ஆண்டுகளாக இந்த பகுதியில் மழை நீர் வடிகாலில், கழிவு நீர் தேங்கி நின்று துர்நாற்றம் வீசி வந்தது. கடந்த 9 மாதத்திற்கு முன்பு இந்த மழை நீர் வடிகாலில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு தண்ணீர் சீராக செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டது.

ஆனால் சில வணிக நிறுவனங்கள் மீண்டும் கழிவு நீரை, மழை நீர் வடிகாலில் திறந்து விட்டுள்ளனர், இனி வணிக நிறுவனங்கள் கண்டிப்பாக அவர்களது இடத்திலேயே கழிவு நீரை உறிஞ்சு குழி அமைத்து அதில் விட நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் வணிக நிறுவனங்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

மாநகர் நல அதிகாரி டாக்டர் ராம்குமார், சுகாதார ஆய்வாளர் ராஜேஷ் உள்ளிட்டோர் உடன் சென்றனர்.

Tags:    

Similar News