உள்ளூர் செய்திகள்

சுவாமிமலை சுவாமிநாதசாமி கோவிலில் கந்தசஷ்டி விழா வருகிற 24-ந் தேதி தொடக்கம்

Published On 2022-10-15 10:26 GMT   |   Update On 2022-10-15 10:26 GMT
  • வருகிற 30-ம் தேதி சண்முகருக்கு 108 சங்காபிஷேகம்.
  • 31-ந் தேதி இரவு தெய்வானை திருக்கல்யாண வைபவம்.

சுவாமிமலை:

அறுபடை வீடுகளில் நான்காம் படை வீடான சுவாமிமலை சாமிநாதசாமி கோவிலில் இந்த ஆண்டு கந்த சஷ்டி திருவிழா வருகின்ற 24-ந்தேதி அன்று இரவு 7 மணிக்கு மேல் விக்னேஸ்வர பூஜை, அணுகையுடன் தொடங்கி அடுத்த மாதம் 4 - ந் தேதி வரை நடைபெற உள்ளது.

இதனை முன்னிட்டு 25ஆம் தேதி அன்று சந்திரசேகரர், அம்பாள், வள்ளி, தெய்வானை, சண்முகர் சமேதமாக வீரகேசரி வீரபாகு உடன் மலைக் கோயிலில் இருந்து படியிறங்கி உற்சவம் மண்டபத்தில் காலை 7:30 மணிக்கு மேல் 9 மணிக்குள் எழுந்தருதல் நிகழ்ச்சியும், தினமும் இரு வேளையும் சந்திரசேகர் வீரபாகு மற்றும் வீரகேசரி ஆகியோர் சூரபத்மனுடன் எதிர்கொண்டு யாகசாலை பூஜை நடைபெற்ற பின் திருவீதி உலா நடைபெற உள்ளது.

இதன் முக்கிய நிகழ்ச்சியான வருகின்ற 30ஆம் தேதி அன்று வள்ளி தெய்வானை சமேத சண்முகருக்கு காலை 11 மணிக்கு 108 சங்காபிஷேகமும் சிறப்பு அபிஷேகமும் நடைபெறுகிறது.

மாலை 6 மணிக்கு தாயார் மீனாட்சி அம்மனுடன் ஸ்ரீ சண்முக சுவாமி ஆட்டுக்கிடா வாகனத்தில் வந்து சக்திவேல் வாங்குதல் நிகழ்வும் மற்றும் கிழக்கு சன்னதியில் கஜமுக சூரன் மற்றும் சிங்கமுக சூரன் ஆகியோரை வதம் செய்கின்ற நிகழ்வும் தெற்கு வீதியில் சூர பத்மனை வதம் செய்கின்ற நிகழ்வும் நடைபெற்று திருவீதி வழியாக சண்முகர் உலா வந்து கோயிலை வந்தடைகிறார்.

அதனை தொடர்ந்து 31ஆம் தேதி அன்று காலை சண்முகர் காவேரி ஆற்றில் குருதி கழுவுதல் நிகழ்ச்சி மற்றும் இரவு தெய்வானை திருக்கல்யாண வைபவம் ஆகியவை நடைபெற உள்ளன.

அதனை தொடர்ந்து மூன்று நாட்களுக்கு ஊஞ்சல் உற்சவம் விழா நடைபெற உள்ளது .

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் துணை ஆணையர் உமாதேவி மற்றும் கோவில் கண்காணிப்பாளர், பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News