உள்ளூர் செய்திகள்

மூடப்பட்டுள்ள கேண்டீன் மற்றும் அருங்காட்சியக கட்டிடம்.

களக்காடு தலையணையில் மூடப்பட்டுள்ள அருங்காட்சியகத்தை மீண்டும் திறக்க வேண்டும்- சுற்றுலா பயணிகள் கோரிக்கை

Published On 2023-05-19 08:46 GMT   |   Update On 2023-05-19 08:46 GMT
  • கேன்டீன் ஐஸ்கிரீம், குளிர்பானங்கள் விற்பனை செய்யப்பட்டது.
  • கட்டிடத்தின் மற்றொரு பகுதியில் அருங்காட்சியகமும் செயல்பட்டு வந்தது.

களக்காடு:

களக்காடு மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள தலையணையில் குளிக்க தினசரி உள்ளூர் மட்டுமின்றி வெளியூர் சுற்றுலா பயணிகளும் வந்து செல்கின்றனர். கடந்த 2017-ம் ஆண்டு அப்போதைய துணை இயக்குனர் ஆரோக்கியராஜ் நடவடிக்கையின் பேரில் தலையணையில் வனத்துறை சார்பில் கேன்டீன் திறக்கப்பட்டது.

அருங்காட்சியகம்

இங்கு ஐஸ்கிரீம், டீ, காப்பி, குளிர்பானங்கள் விற்பனை செய்யப்பட்டு வந்தது. சுற்றுலா பயணிகளும் குளித்து விட்டு, உணவு பொருட்களை வாங்கி பயனடைந்து வந்தனர். கேண்டீனில் விற்பனையும் அதிகரித்து வந்தது.

அதுபோல அதே கட்டிடத்தில் மற்றொரு பகுதியில் அருங்காட்சியகமும் செயல்பட்டு வந்தது. இதில் வனவிலங்குகளின் மாதிரிகள், அவைகளின் சத்தம் எழுப்பும் கருவிகள், பல்வேறு வகையான மீன்கள் உள்ளிட்டவைகள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது. இதனையும் சுற்றுலா பயணிகள் பார்த்து இன்புற்றனர்.

மீண்டும் திறக்க வலியுறுத்தல்

இதனிடையே கொரோனா தடை உத்தரவால் கடந்த 2018-ம் ஆண்டு கேன்டீனும், அருங்காட்சியகமும் மூடப்பட்டது. அதன்பின் 4 ஆண்டுகளாக இதுவரை கேன்டீன், அருங்காட்சியகம் திறக்கப்படாமல் உள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் பாதிப்படைவதுடன், கட்டிடமும் பராமரிப்பின்றி பாழடைந்து வருகிறது.

எனவே மூடப்பட்டுள்ள கேன்டீன் மற்றும் அருங்காட்சியகத்தை மீண்டும் திறக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News