பணி நியமன ஆணையை கலெக்டர் தீபக்ஜேக்கப் வழங்கினார்.
வேலைவாய்ப்பு முகாமில் 307 பேருக்கு பணிநியமன ஆணை வழங்கல்
- முகாமில் மொத்தம் 2,973-க்கும் மேற்பட்ட வர்கள் கலந்து கொண்டனர்.
- அதில் 22 பேர்கள் திறன் பயிற்சிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
தஞ்சாவூர்:
தஞ்சை மன்னர் சரபோஜி அரசினர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முன்னாள் முதல்- அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் இணைந்து தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமை நடத்தியது. முகாமிற்கு கலெக்டர் தீபக்ஜேக்கப் தலைமை தாங்கினார்.
முகாமில் சென்னை, திருப்பூர், கோவை, காஞ்சீபுரம் மற்றும் தஞ்சை உள்ளிட்ட ஊர்களிலிருந்து வந்த தனியார் முன்னணி தனியார் நிறுவனங்கள் உட்பட 140-க்கும் மேற்பட்ட தனியார்துறை நிறுவனங்கள் மற்றும் திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கும் நிறுவனங்கள் கலந்துகொண்டன. இம்முகாமில் 18 வயது முதல் 40 வரை உள்ள 5-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படித்தோர், டிப்ளமோ, ஐ.டி.ஐ., பட்டதாரிகள். நர்சிங் மற்றும் பி.இ படித்த இளைஞர்கள், இளம் பெண்கள் என மொத்தம் 2,973-க்கும் மேற்பட்ட வர்கள் கலந்து கொண்டனர்.
இதில் 307 நபர்களுக்கு பணிநியமன ஆணைகள் வழங்கப்பட்டன. 296 நபர்கள் இரண்டாம் கட்ட தேர்விற்கும், 22 நபர்கள் திறன் பயிற்சிக்கும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.இந்த நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள் துரை.சந்திரசேகரன், டி.கே.ஜி.நீலமேகம், மேயர் சண்.ராமநாதன், மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் உஷாபுண்ணியமூர்த்தி, மகளிர் திட்ட அலுவலர் கோவிந்தராஜ், கல்லூரியின் வேலைவாய்ப்பு அலுவலர் சக்திவேல் மற்றும் பல்வேறு அரசு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.