கோப்பு படம்.
இரும்பு வியாபாரி வெட்டிக்கொலை: 6 பேர் தொடர்ந்து மிரட்டி வந்த நிலையில் பழியை தீர்த்துக்கொண்டனர் - மனைவி பரபரப்பு புகார்
- மோட்டார் சைக்கிளில் வந்த 6 பேர் கொண்ட கும்பல் இரும்பு வியாபாரியை சரமாரியாக வெட்டி சாய்த்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடினர்.
- 6 பேர் என்னை மிரட்டி என்றைக்கு இருந்தாலும் உனது கணவர் சாவு எங்கள் கையில்தான் என்று கூறி வந்தாக மனைவி பரபரப்பு புகார் அளித்துள்ளார்.
நிலக்கோட்டை:
திண்டுக்கல் பாரதிபுரத்தைச் சேர்ந்தவர் அழகர் (வயது 45). இவர் நிலக்கோட்டை அரசு ஆஸ்பத்திரி முன்பு பழைய இரும்புக்கடை வைத்து நடத்தி வந்தார். நேற்று மதியம் தனது கடை அருகே நின்று கொண்டு இருந்தபோது, மோட்டார் சைக்கிளில் வந்த 6 பேர் கொண்ட கும்பல் அழகரை சரமாரியாக வெட்டி சாய்த்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடினர்.
இதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்ததும் நிலக்கோட்டை டி.எஸ்.பி. முருகன், தாசில்தார் தனுஷ்கோடி மற்றும் போலீசார் விரைந்து வந்து அவரது உடலை கைப்பற்றி நிலக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அப்பகுதியில் ஏதேனும் சி.சி.டி.வி. கேமராக்கள் உள்ளதா என்றும், அதில் கொலையாளிகள் உருவம் பதிவாகியுள்ளதா? எனவும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது குறித்து அழகரின் மனைவி மேரி (40) நிலக்கோட்டை போலீஸ் நிலையத்தில் அளித்துள்ள புகாரில் கூறி இருப்பதாவது:-
நானும் எனது கணவர் அழகரும் காதலித்து கடந்த 22 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டோம். எங்களுக்கு 2 மகள்களும், 3 மகன்களும் உள்ளனர். 2 மகள்களுக்கு திருமணம் செய்து கொடுத்து அவர்கள் நிலக்கோட்டை மற்றும் கரூரில் வசித்து வருகின்றனர்.
2 மகன்கள் படித்து வரும் நிலையில் கண்ணன் என்பவர் மட்டும் சென்ட்ரிங் வேலைக்கு சென்று வருகிறார். நான் எனது கணவருடன் இரும்பு கடையில் வேலை பார்த்து வந்தேன். கடந்த 2020-ம் ஆண்டு திண்டுக்கல்லைச் சேர்ந்த சுள்ளான் ரமேஷ் வெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் எனது கணவர் 6-வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்த வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களாகவே திண்டுக்க ல்லைச் சேர்ந்த கார்த்தி, கோவிந்தாபுரத்தைச் சேர்ந்த சிவகணேச சபரி, பிள்ளையார் பாளையத்தைச் சேர்ந்த மாணிக்கம், சதீஸ், சர்புதீன் மற்றும் பெயர் தெரியாத அடையாளம் தெரிந்த நபர் என 6 பேர் என்னிடம் மிரட்டி வந்தனர். என்றைக்கு இருந்தாலும் உனது கணவர் சாவு எங்கள் கையில்தான் என்று கூறி வந்தனர்.
இதனால் பாரதிபுரத்தில் இருந்த நாங்கள் நிலக்கோட்டைக்கு வந்து வேலை பார்த்து வந்தோம். ஆனால் நாங்கள் இங்கு இருப்பதை எப்படியோ தெரிந்து கொண்டு அவர்கள்தான் பழிக்கு பழியாக எனது கணவரை வெட்டி கொலை செய்திருக்க கூடும். எனவே அவர்களை கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு தனது புகார் மனுவில் மேரி தெரிவித்துள்ளார்.
அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே கொலை செய்யப்பட்ட அழகரின் உடல் நிலக்ேகாட்டை அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. இன்று அவரது உடல் உறவினர்க ளிடம் ஒப்படைக்கப்படும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர்.