கோவையில் தொழிற்சாலைகளில் தீவிர கண்காணிப்பு
- தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 70-க்கு மேல் பதிவாகியுள்ளது.
- கடந்த வாரத்தில் ஒரு தொழிற்சாலையில் புதிய கொரோனா தொகுப்பு கண்டறியப்பட்டது
கோவை,
கோவையில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதையடுத்து தொழிற்சாலைகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருவதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கோவை மாவட்டத்தில் கடந்த ஒரு மாத காலமாக தொடர்ந்து கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. குறிப்பாக மாநகராட்சிப் பகுதிகளில் நோய்த் தொற்று பாதிப்பு அதிக அளவில் காணப்படுகிறது. மாவட்டத்தில் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 70-க்கு மேல் அதிகரித்துள்ளதாக சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர். இதில், மாநகராட்சியில் மட்டும் 50-க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அண்மையில் தனியார் தொழிற்சாலையில் கொரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில் தொழிற்சாலைகளில் கண்காணிப்பு சுகாதாரத்துறையினர் தீவிரப்படுத்தியுள்ளனர்.
இது தொடர்பாக சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:- கோவையில் கடந்த வாரத்தில் ஒரு தொழிற்சாலையில் புதிய கொரோனா தொகுப்பு கண்டறியப்பட்டது. இதனையடுத்து, அனைத்து தொழிற்சாலைகளும் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சுகாதார ஆய்வாளர்கள் மூலம் தொடர்ந்து தொழிற்சாலைகளில் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. அதன்பின் வேறு எந்த கொரோனா தொகுப்பும் ஏற்படவில்லை. மாவட்டம் முழுவதும் பரவலாக தொற்று பாதிப்பு காணப்படுகிறது. குறிப்பாக மாநகராட்சியில் அதிக அளவில் காணப்படுகிறது. நோய்த் தொற்று பாதிப்பை தவிர்க்க பொதுமக்கள் அனைவரும் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.