உள்ளூர் செய்திகள்

சென்னை விமான நிலையத்துக்கு எரிபொருள் நிரப்ப வரும் இலங்கை விமானங்கள் அதிகரிப்பு

Published On 2022-07-14 09:22 GMT   |   Update On 2022-07-14 09:22 GMT
  • இலங்கையில் விமானங்கள் செயல்படவும், எரிபொருள் தட்டுப்பாடு நிலவுகிறது.
  • சென்னையில் இருக்கும் விமானங்களுடன் சேர்த்து இலங்கை விமானங்களும் வரிசையில் நிறுத்தப்பட்டு எரிபொருள் நிரப்பி செல்கிறது.

ஆலந்தூர்:

இலங்கையில் தற்போது அரசியல் நெருக்கடி உச்சகட்டத்தை எட்டி உள்ளது. இதனால் பொதுமக்களின் போராட்டம் தீவிரம் அடைந்து உள்ளது. பொருளாதார நெருக்கடி மற்றும் எரிபொருள் தட்டுப்பாட்டால் மக்கள் தவித்து வருகிறார்கள்.

இலங்கையில் விமானங்கள் செயல்படவும், எரிபொருள் தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால் கொழும்புவில் இருந்து வெளிநாடுகளுக்கு செல்லும் இலங்கை விமானங்கள் சென்னை, திருவனந்தபுரம், கொச்சி ஆகிய விமான நிலையங்களில் எரிபொருள் நிரப்பிக் கொண்டு செல்கின்றன.

சென்னையில் கடந்த சில நாட்களாக எரிபொருள் நிரப்ப வரும் இலங்கை விமானங்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது.

சென்னையில் இருக்கும் விமானங்களுடன் சேர்த்து இலங்கை விமானங்களும் வரிசையில் நிறுத்தப்பட்டு எரிபொருள் நிரப்பி செல்கிறது.

கடந்த 15 நாட்களில் பாரத் பெட்ரோலியத்தில் மட்டும் சென்னை,கொச்சி, திருவனந்தபுரம் ஆகிய விமான நிலையங்களில் சுமார் 100-க்கும் மேற்பட்ட இலங்கை விமானங்கள் எரிபொருள் நிரப்பி சென்றுள்ளன.

இதுகுறித்து விமான நிலைய அதிகாரி ஒருவர் கூறும்போது, இலங்கையில் தற்போது பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதன் காரணமாக, இலங்கையில் இருந்து வெளிநாடுகளுக்கு செல்லும் விமானங்கள் சென்னையில் தரையிறக்கப்பட்டு, எரிபொருள் நிரப்பிக்கொண்டு செல் கின்றன. அதேபோல் கொச்சி மற்றும் திருவனந்தபுரத்திலும் எரிபொருள் நிரப்பி கொண்டு செல்கிறது.

நம்மை பொறுத்தவரை சென்னை விமான நிலையத்திற்கு இது பொருளாதார லாபம்தான். ஏனென்றால் மற்ற நாட்டு விமானங்கள் சென்னை விமான நிலையத்தில் நிறுத்தப்படும்போது அதற்கான வாடகை தொகையை தர வேண்டும். அதுமட்டுமின்றி விமான எரிபொருள் நிரப்பி செல்வதும் வருமானம்தான் என்றார்.

Tags:    

Similar News