சென்னையில் வெயிலின் தாக்கம் அதிகரிப்பு: மாநகர ஏ.சி. பஸ்கள் கூடுதலாக இயக்கப்படுமா? பயணிகள் எதிர்பார்ப்பு
- கோடை வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து உள்ளதால் கூடுதலாக ஏ.சி. பஸ்களை இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- பெங்களுர் உள்ளிட்ட மெட்ரோ நகரங்களில் ஏ.சி. மற்றும் ஏ.சி. அல்லாத பஸ்களின் விகிதத்தை 20:80 என்ற எண்ணிக்கையில் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
சென்னை:
அக்னி வெயில் முடிந்தாலும் சென்னையில் வெப்பத்தின் தாக்கம் தொடர்ந்து அதிக அளவில் உள்ளது. நுங்கம்பாக்கம், மீனம்பாக்கத்தில் இன்று 100 டிகிரிக்கு மேல் வெயில் வாட்டி வதைத்துள்ளது.
வெப்பத்தின் தாக்கத்தால் மாநகர பஸ்களில் பயணம் செய்யும் பயணிகள் கடும் சிரமம் அடைந்து வருகிறார்கள். எனவே சென்னையில் கூடுதலாக மாநகர ஏ.சி. பஸ்களை இயக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
சென்னையில் தற்போது 48 மாநகர ஏ.சி. பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டு வருகின்றன. வண்டலூர்-பிராட்வே (21ஜி), தாம்பரம்-திருவான்மியூர் (91), கோயம்பேடு-கேளம்பாக்கம் (570) வழித்தடங்களில் அதிக அளவு ஏ.சி. பஸ்கள் செல்கின்றன. எனினும் இது நகரத்தின் தேவையில் பத்தில் ஒரு பங்கிற்கும் குறைவானதாகும்.
பெங்களுர் உள்ளிட்ட மெட்ரோ நகரங்களில் ஏ.சி. மற்றும் ஏ.சி. அல்லாத பஸ்களின் விகிதத்தை 20:80 என்ற எண்ணிக்கையில் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி சென்னையில் குறைந்தது 600 அல்லது அதற்கு மேலான ஏ.சி. பஸ்கள் இருக்க வேண்டும்.
இதுகுறித்து பயணி ஒருவர் கூறும்போது, "ஏ.சி. பஸ்கள் மாமல்லபுரம் சாலை, ஐ.டி. நிறுவன பகுதிகளில் இயக்கப்படுகிறது. வார இறுதி நாட்களில் பாதி அளவு பஸ்களே ஓடுகின்றன. மீதி பஸ்கள் டெப்போக்களில் நிறுத்தி வைக்கப்படுகிறது.
எனவே தற்போது மக்கள் நடமாட்டம் அதிகரித்துள்ள மெரினா கடற்கரை, வண்டலூர் உயிரியல் பூங்கா போன்ற சுற்றுலா தலங்களுக்கு ஏ.சி. பஸ்கள் இயக்கலாம்.
கோடை வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து உள்ளதால் கூடுதலாக ஏ.சி. பஸ்களை இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.
இது தொடர்பாக போக்குவரத்து அதிகாரி ஒருவர் கூறும்போது, "இதற்கு முன்பு 24 ஏ.சி. பஸ்கள் இயக்கப்பட்டது. தற்போது 48 பஸ்களாக அதிகரிக்கப்பட்டு உள்ளது. ஏ.சி. பஸ்களை பொதுமக்கள் அதிகம் உள்ள சுற்றுலா வழித்தடங்களில் ஏற்கனவே திருப்பி விட முயற்சி செய்தோம். ஆனால் பொதுமக்கள் மத்தியில் போதிய வரவேற்பு இல்லை. புறநகர் ரெயில்களை போலவே வார இறுதி நாட்களில் பயணிகள் வருகை 50 சதவீதத்துக்கும் கீழ் உள்ளது.
வார நாட்களில் ஏ.சி. பஸ்சில் ஒரு நாள் வருமானம் சராசரியாக ரூ.14 ஆயிரம் ஆகும். இது மாநகர டீலக்ஸ் பஸ்களுடன் ஒப்பிடும்போது 10 முதல் 15 சதவீதம் குறைவு ஆகும். ஆனாலும் மாநகர போக்குவரத்து கழகம் பயணிகளின் தேவையை கருத்தில் கொண்டு ஏ.சி. பஸ்களை இயக்கி வருகிறது என்றார்.