திருவள்ளூர் மாவட்டத்தில் 6 வழிச்சாலைக்கு கூடுதலாக நிலம் எடுக்க விவசாயிகள் எதிர்ப்பு- வருவாய் அலுவலர் அலுவலகம் முற்றுகை
- சுமார் 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பேரணியாக வந்து முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- விரிவான திட்ட அறிக்கை உள்ளிட்ட 8 ஆவணங்களை தரக்கோரி சிறப்பு வருவாய் அலுவலர் முத்துராமலிங்கத்திடம் கோரிக்கை மனு அளித்தனர்.
திருவள்ளூர்:
எண்ணூர் காமராஜர் துறைமுகம், காட்டுப்பள்ளி அதானி துறைமுகத்துக்கு சரக்கு வாகனங்கள் விரைவாக சென்று வருவதற்காக தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம், ஆந்திர மாநிலம்-சித்தூர் முதல் திருவள்ளூர் மாவட்டம் தச்சூர் வரை 126 கி.மீ. தூரத்துக்கு ஆறு வழிச்சாலை அமைக்க திட்டமிட்டுள்ளது.
மேலும் சென்னை, பெங்களூரு, கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலைகளை இணைக்கும் வகையில் இந்த சாலை திட்டம் கொண்டு வர முடிவு செய்யப்பட் டுள்ளது. இதில் ஆந்திராவில் 75 கி.மீ. தமிழகத்தில் பள்ளிப்பட்டு, ஊத்துக்கோட்டை, பொன்னேரி வட்டங்களில் 51 கி.மீட்டர் என மொத்தம் 126 கி.மீ. தூரத்துக்கு 6 வழிச்சாலை அமைய இருக்கிறது. இது ரூ.3 ஆயிரத்து 197 கோடி மதிப்பில் அமைக்கப்பட உள்ளது.
இதற்காக ஆந்திராவில் 2,186 ஏக்கர் தமிழகத்தில் 889 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டு கையகப்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். ஆந்திராவில் 6 வழிச்சாலை திட்டத்திற்கான பணி நடைபெற்று வருகிறது. ஆனால் திருவள்ளூர் மாவட்டத்தில் விவசாயிகளின் தொடர் எதிர்ப்பால் பணிகள் மேற்கொள்ளாமல் அதிகாரிகள் கிடப்பில் போட்டுள்ளனர்.
பொன்னேரி வட்டம் மற்றும் ஊத்துக்கோட்டை வட்டத்திற்கு உட்பட்ட விவசாயிகள் 6 வழிச்சாலை திட்டத்திற்கு ஆரம்பம் முதலே இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி உள்ளனர்.
இதற்கிடையே இந்த 6 வழிச்சாலை திட்டத்துக்கு திருவள்ளூர் மாவட்டத்தில் மேலும் விவசாய நிலங்களை கூடுதலாக எடுக்க சிறப்பு நில எடுப்பு அதிகாரி தரப்பில் 28 கிராம விவசாயிகளின் கருத்து கேட்புக் கூட்டத்திற்கு அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பி இருந்தனர்.
இதில் முதல் கட்டமாக ஊத்துக்கோட்டை வட்டத்துக்குட்பட்ட தும்பாக்கம், பருத்திமேனி குப்பம், பனப்பாக்கம், மாம்பாக்கம், சென்னங் கரணை, புதுச்சேரி, நந்தி மங்கலம், ராமலிங்கபுரம், போந்தவாக்கம் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த விவசாய மக்கள் கருத்து கேட்பு கூட்டத்துக்கு அழைக்கப்பட் டிருந்தனர். இந்த கருத்து கேட்பு கூட்டத்தை விவசாயிகள் புறக்கணித்தனர். மேலும் செய்து திருவள்ளூர் ஆயில் மில் பகுதியில் இருந்து பெரியக்குப்பம் பகுதியில் உள்ள நில எடுப்பு சிறப்பு வருவாய் அலுவலர் அலுவலகத்தை நோக்கி சுமார் 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பேரணியாக வந்து முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது சுற்றுப்புறச் சூழல் பாதிப்பு ஆய்வறிக்கை, நீர் நிலங்கள் பற்றி ஆய்வறிக்கை, விரிவான திட்ட அறிக்கை உள்ளிட்ட 8 ஆவணங்களை தரக்கோரி சிறப்பு வருவாய் அலுவலர் முத்துராமலிங்கத்திடம் கோரிக்கை மனு அளித்தனர்.
அப்போது நில எடுப்பு தாசில்தார்கள் திருமூர்த்தி காந்திமதி பாலாஜி ஹரி கிருஷ்ணன் மணிகண்டன் உடன் இருந்தனர். இதனால் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது.