பக்தர்கள் வீரபத்திர சாமிகாரம் எடுத்து ஆடும்போது எடுத்த படம்.
கரகூர் கிராமத்தில் வீரபத்திர சாமி கோவில் திருவிழா
- வினோத வழிபாட்டினை காண, சுற்று வட்டார பகுதிகளிலிருந்து ஏராளமான மக்கள் வந்து கண்டு ரசித்து, சாமி தரிசனம் செய்தனர்.
- இரவு 12- மணி அளவில் வீரபத்திர சாமி பலகையை தலை மேல் வைத்துக் கொண்டு சாமி ஆடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
தருமபுரி,
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்த கரகூரை சுற்றியுள்ள கிராமங்களில் 500 -க்கும் மேற்பட்ட குரும்பர் இன மக்கள் வசித்து வருகின்றனர்.
இந்த சமூக மக்களின் குல தெய்வமான வீரபத்திர சாமிக்கு கோவில் கட்டி வழிபட்டு வருகின்றனர். இந்த கோவில் திருவிழா ஆண்டு தோறும் தை மாதத்தில் நடைபெறுவது வழக்கம்.
இந்த திருவிழாவில் வெளியூரில் உள்ள தங்களது சமூகத்தினர் எல்லோரும் ஒன்றிணைந்து ஆண்கள், பெண்கள் என அனைவரும் விரதமிருந்து தலையில் தேங்காய் உடைத்து, வினோத வழிபாடு செய்து நேர்த்திக்கடன் செலுத்தி, குல தெய்வமான வீரபத்திர சாமியை வழிபட்டனர். பின்னர் சாமிக்கு சிறப்பு அலங்காரமும், பூஜையும் நடைபெற்றது.
தொடர்ந்து வான வேடிக்கையுடன் சுற்றுவட்டார பகுதியில் உள்ள 7 ஊரை சேர்ந்த கிராம மக்கள் சாமிகாரம் எடுத்து கொண்டு மேள தாளத்துடன், ஊர்லவலமாக கோவிலுக்கு வந்தனர்.
14- வருடங்களுக்கு பிறகு நடைபெறும் இவ்விழாவில் பெங்களூர், சென்னை, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு பகுதியில் உள்ள குரும்பர் இனத்தை சேர்ந்த பக்தர்கள் தலையில் தேங்காய் உடைக்கும் வினோத வழிபாட்டினை காண, சுற்று வட்டார பகுதிகளிலிருந்து ஏராளமான மக்கள் வந்து கண்டு ரசித்து, சாமி தரிசனம் செய்தனர்.
இரவு 12- மணி அளவில் வீரபத்திர சாமி பலகையை தலை மேல் வைத்துக் கொண்டு சாமி ஆடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியை கொட்டும் பனியையும் பாராமல் ஏராளமான கிராம மக்கள் பக்தியுடன் பார்த்து ரசித்தனர். இரவு முழுவதும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்நிகழ்சிக்கான ஏற்பாடுகளை குரும்ப கவுண்டர் அன்பழகன் செய்திருந்தார்.