கூடலூரில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண கோரி கவுன்சிலர்கள் மனு
- சாலையின் இருபுறமும் வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன.
- வெளி மாநில பயணிகளும் விரைவாக ஊருக்குச் செல்ல வசதியாக இருக்கும்.
ஊட்டி,
கூடலூா் நகரில் நிலவும் போக்குவரத்து நெரிசலுக்கு தீா்வு காணக்கோரி கோட்டாட்சியர் முகமது குதுரத்துல்லாவிடம், கவுன்சிலர்கள் மனு அளித்தனா். அந்த மனுவில் தெரிவித்திருப்பதாவது:
நீலகிரி மாவட்டம், கூடலூா் நகரில் தற்போது கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. பகல் நேரங்களில் அவசர தேவைக்காக ஆம்புலன்ஸ் வாகனம்கூட செல்லமுடியாத நிலை உள்ளது. தமிழகம், கேரளம், கா்நாடகம் ஆகிய 3 மாநிலங்களை இணைக்கும் பகுதியானதால் இந்த நகரில் பயணிகள் போக்குவரத்து உள்பட தென்மாநிலங்களுக்குச் செல்லும் சரக்கு போக்குவரத்து அனைத்தும் சாலையில் நீண்ட நேரம் காத்துக்கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.எனவே நகரில் வாகன நெரிசலைக் குறைக்க நடுகூடலூா் பிள்ளையாா் கோவில் தெருவிலிருந்து மாக்கமூலா, புதிய பஸ் நிலையம் பகுதியை இணைக்கும் இணைப்பு சாலையை மேம்படுத்தி திறந்துவிட வேண்டும். இதன் மூலம் நகரில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தலாம். வெளி மாநில பயணிகளும் விரைவாக ஊருக்குச் செல்ல வசதியாக இருக்கும்.
மேலும், கூடலூா் நகராட்சி அலுவலகம் முதல் புதிய பஸ் நிலையம் வரையிலும், கள்ளிக்கோட்டை சாலையின் இருபுறமும் வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன.இதுவும் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது. எனவே, கூடலூா் நகரில் வாகன நிறுத்துமிடங்களைத் தோ்வு செய்து வழங்கவேண்டும். இளைஞா்கள் மற்றும் மாணவா்கள் நலன் கருதி கூடலூா் நகரில் விளையாட்டு மைதானம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.