உள்ளூர் செய்திகள்

கடலூர் வண்டிப்பாளையத்தில் நடந்த முகாமை கலெக்டர் பாலசுப்ரமணியம் நேரில் ஆய்வு செய்தார். அப்போது மேயர் சுந்தரி ராஜா தடுப்பூசி போட்டுக் கொண்டார். அருகில் துணை மேயர் தாமரைச்செல்வன் உள்ளார்.

கடலூர் மாவட்டத்தில் 3,753 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்

Published On 2022-07-24 15:56 IST   |   Update On 2022-07-24 15:56:00 IST
  • கடலூர் மாவட்டத்தில் 3,753 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது.
  • மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

கடலூர்:

தமிழகத்தில் தற்போது கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் கணிசமாக உயர்ந்து வருகிறது. இதன் காரணமாக தமிழக அரசு மாநில முழுவதும் தடுப்பூசி முகாம் நடத்த வேண்டும் என அறிவித்திருந்தது. அதன்படி கடலூர் மாவட்டத்தில் 3753 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் இன்று நடந்தது. இந்த நிலையில் 3-வது பூஸ்டர் தடுப்பூசி ஏற்கனவே தனியார் மருத்துவமனையில் பணம் செலுத்தி பொதுமக்கள் போட்டு வந்தனர்.

தற்போது 75 -வது சுதந்திர தினத்தை முன்னிட்டு கடந்த 15-ந் தேதி முதல் 75 நாட்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி அரசு சார்பில் இலவசமாக முகாம்களிலும் போடப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் கடலூர் வண்டிப்பாளையம் பகுதியில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இதனை மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா தடுப்பூசி செலுத்திக்கொண்டு அங்கிருந்த பொது மக்களிடம் தடுப்பூசி என்பது மிகவும் பாதுகாப்பானதாகும். ஆகையால் அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொண்டு கொரோனா பாதிப்பிலிருந்து முழுவதுமாக பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார்.

அப்போது துணை மேயர் தாமரைச்செல்வன், சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் டாக்டர் மீரா, மாநகராட்சி செயற்பொறியாளர் புண்ணியமூர்த்தி, நகர் நல அலுவலர் டாக்டர் அரவிந்த் ஜோதி, மாவட்ட தி.மு.க. மாணவரணி துணை அமைப்பாளர் பாலாஜி உள்ளனர்.

Tags:    

Similar News