உள்ளூர் செய்திகள்

கோவையில் மக்களுக்கு தொல்லை கொடுத்த 40 நாய்கள் பிடிபட்டன

Published On 2022-08-01 09:27 GMT   |   Update On 2022-08-01 09:28 GMT
  • நாய்கள் அந்த வழியாக நடந்து செல்பவர்கள் மற்றும் வாகன ஓட்டிகளை துரத்தி செல்கின்றனர்.
  • அனைத்து வார்டுகளிலும் மக்களை அச்சமூட்டும் நாய்களை பிடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்

கோவை:

கோவை மாநகராட்சி பகுதிகளில் தெருநாய்களால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

குறிப்பாக உக்கடம், ராமநாதபுரம், புலியகுளம், சரவணம்பட்டி, குனிய முத்தூர், கரும்புக்கடை, சாரமேடு உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவில் தெருநாய்கள் உள்ளன.இந்த நாய்கள் அந்த வழியாக நடந்து செல்பவர்கள் மற்றும் வாகன ஓட்டிகளை துரத்தி செல்கின்றனர். சில சமயங்களில் கடித்து விடுகின்றன. நாய்களின் தொல்லையால், வாகன ஓட்டிகள் சில நேரங்களில் விபத்துகளில் சிக்கும் அபாயமும் உள்ளது.

கடந்த வாரம் கூட உக்கடம் ஞானியார் நகரில் தெருநாய் கடித்து 11 பேர் காயம் அடைந்தனர். இதை தொடர்ந்து தெருநாய்கள் தொல்லையை தீர்க்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கையை தீவிரப்படுத்தி உள்ளது.

அதன்படி கடந்த வாரம் முதல் மாநகர பகுதிகளில் மக்களுக்கு இடையூறாக உள்ள நாய்கள் வலைகள் மூலமாக பிடித்து ஒண்டிப்புதூர், சீரநாயக்கன் பாளையம் பகுதிகளில் உள்ள கருத்தடை மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், மாநகரில் கடந்த ஒரு வாரமாக 50க்கும் மேற்பட்ட தெருக்களில் இடையூறாக உள்ள நாய்களை கண்டறிந்து, அவற்றை தனியார் உதவியுடன் பிடித்து கருத்தடை மையங்களுக்கு அனுப்பும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதுவரை 40 நாய்கள் பிடிக்கப்பட்டுள்ளன. மாநகரில் உள்ள அனைத்து வார்டுகளிலும் மக்களை அச்சமூட்டும் நாய்களை பிடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றனர்.

Tags:    

Similar News