போத்தனூரில் இளம்பெண்ணிடம் கத்தியை காட்டி மிரட்டி செல்போன் பறிக்க முயற்சி
- மகாதேவி போத்தனூர் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காமிரக்களை ஆய்வு செய்து வருகின்றனர்.
குனியமுத்தூர்,
கோவை சவுரிப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் செல்லய்யா. இவரது மகள் மகாதேவி (வயது 21). இவர் போத்தனூர் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.
சம்பவத்தன்று அவர் போத்தனூர் நஞ்சுண்டாபுரம் பகுதியில் வேலையை முடித்து விட்டு வீட்டுக்கு செல்வதற்காக நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வாலிபர் ஒருவர் திடீரென மகாதேவி அருகில் வந்து அவரது கையில் இருந்து செல்போனை பறிக்க முயற்சி செய்தார்.
இதைகண்டு அதிர்ச்சி அடைந்த அவர் செல்போனை இருக்க பிடித்து கொண்டார். இதனால் ஆத்திரம் அடைந்த அந்த மர்ம நபர் மகாதேவியை கீழே தள்ளிவிட்டு தகாத வார்த்தைகளால் திட்டி கத்தியை காட்டி மிரட்டி செல்போனை கேட்டார்.
பயந்து போன அவர் சத்தம் போட்டார். அவரின் சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அவர்கள் வருவதை பார்த்து அந்த வாலிபர் அங்கிருந்து தப்பி சென்றார். பின்னர் இதுகுறித்து மகாதேவி போத்தனூர் போலீசில் புகார்அளித்தார்.
புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காமிரக்களை ஆய்வு செய்து செல்போன் பறிக்க முயற்சி செய்த அந்த வாலிபர் யார்? என விசாரணை நடத்தி வருகின்றனர்.