ராஜா எம்.எல்.ஏ.விடம் மனு கொடுத்த கிராமமக்கள்.
சங்கரன்கோவில் அருகே கிராம மக்களின் கோரிக்கையை ஏற்று உடனடியாக தண்ணீர் வசதி
- குடிநீர் முறையாக விநியோகிக்கப்படவில்லை என கூறி திருமலாபுரம் பகுதி மக்கள் கோவிலில் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- புதிய பைப் லைன் அமைப்பதற்காக 530 கோடி ஒதுக்கீடு செய்து அதற்கான ஆயத்த பணிகள் நடைபெற்று வருகிறது.
சங்கரன்கோவில்:
சங்கரன்கோவில் தாலுகா மேலநீலிதநல்லூர் ஒன்றியம் பனவடலிசத்திரம் ஊராட்சிக்கு உட்பட்டது திருமலாபுரம் கிராமம். இங்கு கடந்த ஒரு மாத காலமாக ஊருக்குள் தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டத்தில் குடிநீர் முறையாக விநியோகிக்கப்படவில்லை என கூறி அப்பகுதி மக்கள் கோவிலில் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ராஜா எம்.எல்.ஏ.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. மற்றும் மேலநீலிதநல்லூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் பெரியதுரை ஆகியோர் பொது மக்களின் கோரிக்கைகளை கேட்டறிந்தனர்.
வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ, பொதுமக்களிடம் நமது பகுதியில் 2006-ம் ஆண்டுக்கு முன்பாக போடப்பட்ட பைப் லைன்கள் அப்போதைய மக்கள் தொகைக்கு ஏற்ப குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டது. தற்போது மக்கள் தொகை பெருக்கத்தினாலும் புதிய பைப் லைன் போடுவதற்கு வேண்டியும் தமிழக முதல்-அமைச்சரிடம் இரண்டு முறை நேரில் மனு கொடுத்துதுள்ளேன். மானூர் மேலநீலிதநல்லூர் குருவிகுளம் புளியங்குடி பகுதிகளில் புதிய பைப் லைன் அமைப்பதற்காக 530 கோடி ஒதுக்கீடு செய்து அதற்கான ஆயத்த பணிகள் நடைபெற்று வருகிறது.
புதிய பைப் லைன்
புதிய பைப் லைன் ஆரம்பித்த பின்பு இப்பகுதி மக்களுக்கு முறையாக குடிநீர் விநியோகம் செய்யப்படும். ஏற்கனவே உள்ள குடிநீர் பைப் லைனில் ஏற்பட்டுள்ள அடைப்புகள் சரி செய்யப்பட்டு ஓரிரு நாட்களுக்குள் சீரான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
தொடர்ந்து அதிகாரிகளிடம் ஆலோசனை செய்த ராஜா எம்எல்ஏ போராட்டம் நடந்த மறுநாள் காலையிலேயே திருமலாபுரம் பொதுமக்கள் வைத்த கோரிக்கையான குடிநீர் பிரச்சனையை தீர்த்து திருமலாபுரம் கிராமத்திற்கு உட்பட்ட பொதுமக்கள் அனைவருக்கும் 50 ஆயிரம் லிட்டர் தண்ணீர் கிடைக்கும்படி செய்தார்.
அதுமட்டுமல்ல தண்ணீர் மாசு படிந்ததாக வருகின்றது என மீண்டும் மக்கள் கோரிக்கை வைத்திருந்தார்கள். உடனடியாக குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளர் கனகராஜ் மற்றும் அதிகாரிகளிடம் பேசி சுத்தமான குடிநீர் வழங்க நடவடிக்கை மேற்கொண்டார். எம்.எல்.ஏ.வின் இந்த நடவடிக்கையை பொதுமக்கள் பாராட்டினர்.