கொலை மிரட்டலால் 2 ஆண்டாக கணவர் வீட்டை விட்டு வெளியே செல்லவில்லை- இளம்பெண் கண்ணீர் புகார்
- காட்டூர் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தனர். ஆனால் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
- கலப்பு திருமணம் செய்ததால் உறவினர் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து கொலை மிரட்டல் விடுத்து வருகிறார்கள்.
பொன்னேரி:
மீஞ்சூரை அடுத்த வாயலூர் குப்பத்தை சேர்ந்தவர் ஆனந்தகுமார். கூலித்தொழிலாளி. இவர் அதே பகுதியை சேர்ந்த மாலதி என்பவரை காதலித்து பெற்றோர் எதிர்ப்பை மீறி கலப்பு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.
ஆனந்தகுமாரும், மாலதியும் வெவ்வேறு சமூகத்தினர் என்பதால் தொடர்ந்து எதிர்ப்பு வந்தது. உறவினர்கள் கொலை மிரட்டலும் விடுத்ததாக தெரிகிறது. இதனால் காதல் தம்பதி பயந்து வாழும் நிலை ஏற்பட்டது.
இதுகுறித்து அவர்கள் காட்டூர் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தனர். ஆனால் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. கொலை மிரட்டலால் பயந்து போன ஆனந்தகுமார் வீட்டை விட்ட வெளியே செல்லாமல் இருந்து வருகிறார்.
இந்நிலையில் மாலதி, தனது கணவர் ஆனந்தகுமார் மற்றும் 2 மகன்களுடன் வந்து பொன்னேரி கோட்டாட்சியர் அலுவலகத்தில் கண்ணீர் மல்க புகார் மனு அளித்தார். அதில் கலப்பு திருமணம் செய்ததால் உறவினர் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து கொலை மிரட்டல் விடுத்து வருகிறார்கள். இதனால் எனது கணவர் வீட்டை விட்டு வெளியே போகாமல் கடந்த 2 வருடமாக வீட்டில் உள்ளார். எனவே எனது கணவர், குழந்தைகளுக்கு பாதுகாப்பு அளித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டு உள்ளார். இது தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.