உள்ளூர் செய்திகள்

கோவில் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட இந்து அமைப்பினர்.

பழனியில் சேவல், புறா ஏலம் விடும் இடம் மாற்றம்- இந்து அமைப்பினர் எதிர்ப்பு

Published On 2023-07-28 10:08 IST   |   Update On 2023-07-28 10:08:00 IST
  • சேவல், புறா போன்றவை தினந்தோறும் மாலையில் மலைக் கோவிலில் வைத்து ஏலம் விடப்பட்டு வந்தது.
  • இந்து அமைப்பினர் கோவில் அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

பழனி:

பழனி முருகன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் பணம், நகை மட்டுமல்லாது சேவல், புறா, ஆடு, பசு உள்ளிட்டவற்றையும் காணிக்கையாக செலுத்துகின்றனர். இதில் சேவல், புறா போன்றவை தினந்தோறும் மாலையில் மலைக்கோவிலில் வைத்து ஏலம் விடப்பட்டு வந்தது. இந்நிலையில் மலைக்கோவிலில் வைத்து ஏலம் நடப்பதால் பெரும்பாலான பக்தர்கள் ஏலத்தில் கலந்துகொள்ள முடியாத நிலை இருந்தது. எனவே இந்த ஏலத்தை அடிவாரத்தில் வைத்து நடத்த வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை வைத்தனர்.

அந்த கோரிக்கையை ஏற்று பழனி கோவில் நிர்வாகம் சார்பில், காணிக்கையாக செலுத்தும் சேவல்களை அடிவாரம் கோசாலை பகுதியில் வைத்து ஏலம் விட முடிவு செய்யப்பட்டது. அதன்படி நேற்று முன்தினம் முதல் அடிவார பகுதியில் ஏலம் நடைபெற்று வருகிறது. நேற்று மாலை உதவி ஆணையர் லட்சுமி முன்னிலையில் அடிவாரத்தில் ஏலம் நடைபெற்றது.

இந்நிலையில் இந்து அமைப்பை சேர்ந்த சிலர் ஏலம் நடந்த பகுதிக்கு வந்தனர். அடிவாரத்தில் ஏலம் நடப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்ததுடன், மலைக்கோவிலில் நடத்த வேண்டும் என வலியுறுத்தினர். இதற்கிடையே இந்து அமைப்பின் நிர்வாகிகளை உதவி ஆணையர் ஒருமையில் பேசியதாக கூறி இந்து அமைப்பினர் கோவில் அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்த பழனி அடிவாரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர். நேற்று நடந்த பிரச்சினையால் எந்த சேவல், புறாவும் ஏலம் விடப்படவில்லை.

Tags:    

Similar News